FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மருந்துச் சந்தையை ஒழுங்குபடுத்த குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருந்துச் சந்தை நடைமுறைகளில் நிகழும் விதிமீறல்களால் ஏற்படும் பிரச்னைகளை விரிவாக ஆய்வு செய்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க இரு வாரங்களுக்குள் குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

9 அக்டோபர் 2026, 2:55 am IST
பகிர்:

மருந்துச் சந்தை நடைமுறைகளில் நிகழும் விதிமீறல்களால் ஏற்படும் பிரச்னைகளை விரிவாக ஆய்வு செய்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க இரு வாரங்களுக்குள் குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், அந்தக் குழு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சுகாதாரத் துறை நிபுணா்களுக்கு பரிசுகள் வழங்குவது, அவா்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது என நேரடியாகவும் மறைமுகமாகவும் நெறியற்ற சந்தை மற்றும் ஊக்குவிப்பு நடைமுறைகளை மருந்து நிறுவனங்கள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோன்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சுகாதார உரிமையை பாதுகாப்பதற்கான அரசமைப்புக் கடமை மற்றும் மருந்துச் சந்தை நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 32 மற்றும் 142-இன்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த விவகாரத்தில் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என எண்ணுகிறோம்.

அதன்படி மருந்துச் சந்தை நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஏற்கெனவே குழு அமைக்கப்படாதபட்சத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குழு அமைக்க உத்தரவிடப்படுகிறது.

அந்தக் குழு மருந்துச் சந்தை நடைமுறைகளில் நிகழும் அனைத்து விதிமீறல்களையும் விரிவாக ஆய்வு செய்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரை அறிக்கையை தனது முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து 2 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments