வாக்குத் திருட்டு: குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!
வாக்குத் திருட்டு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியா கூட்டணியினர் கருத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியா கூட்டணியினர் கருத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தில்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த அக். 6 ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் அக். 7 ஆம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்களை காவல்துறை கைது செய்தது.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அவரிடம் வாக்காளர் பட்டியலில் நடந்ததாக முறைகேடுகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் ராகுல் காந்தி பேசுகையில், “வாக்குத் திருட்டு குறித்த எங்களின் குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மறுக்கவோ அல்லது அது குறித்து கேள்வி எழுப்பவோ இல்லை. வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவர் கோரியிருப்பது எனக்கு அதிர்ச்சியளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் அவர் கோரியுள்ளார்.
வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள் நாடு முழுவதற்கும் தெரியும் என்று நான் அவரிடம் கூறினேன். மாநிலம் மாநிலமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. எங்கள் குற்றச்சாட்டுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மறுத்துவிடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நாங்கள் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவைத் தவிர்த்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, சமாஜவாதி கட்சி தலைவர் ராஜீவ் ராய், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சுப்ரியா சுலே, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.
Rahul Gandhi-led INDIA bloc leaders met President Droupadi Murmu at Rashtrapati Bhavan. The Congress leader said he was 'shocked' that she had not denied their allegations of electoral fraud but had sought proof of 'vote chori'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.