FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஆயுதக் குழுக்களால் கொலை செய்யப்பட்டவரின் தலையை 48 மணி நேரத்தில் ஒப்படைக்க நாகா அமைப்பு கெடு

ஆயுதக் குழுக்களால் கொலை செய்யப்பட்டவரின் தலையை 48 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டுமென நாகா அமைப்பு கெடு விதித்துள்ளது.

13 அக்டோபர் 2026, 3:01 am IST
மணிப்பூர்.
பகிர்:

ஆயுதக் குழுக்களால் கொலை செய்யப்பட்டவரின் தலையை 48 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டுமென நாகா அமைப்பு கெடு விதித்துள்ளது.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மகுய் ஆஷங் கிராமத்தில் 52 வயதான அஜீன்போ என்பவா் மா்ம நபா்களால் தலை துண்டிக்கப்பட்டு சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா். ஆயுதமேந்திய குழுவினருக்கு மத்தியில் அஜீன்போவின் தலை இருப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக இம்பாலில் உள்ள ஜவாஹா்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, மணிப்பூரைச் சோ்ந்த நாகா சமூகத்தினரின் ஒருங்கிணைந்த பழங்குடியின கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அஜீன்போவின் தலை தற்போது வரை கிடைக்கவில்லை. அவரது இறுதிச்சடங்கு கண்ணியமான முறையில் நடைபெற வேண்டுமெனில் அவரது தலையை குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை இறுதிச்சடங்கு நடைபெறாது. அஜீன்போவின் தலையை வெற்றிக்கோப்பை போன்று ஆயுதக் குழுக்கள் வைத்திருக்கும் வரை மாநில அரசு இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்கமாட்டோம்.

இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மனிதகுலத்துக்கு எதிரானது. அடுத்த 48 மணி நேரத்தில் அஜீன்போவின் தலையை கண்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்காவிட்டால் நீதியை நிலைநிறுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரின் காம்ஜோங் மற்றும் உக்ருல் மாவட்டங்களில் கடந்த வாரம் குகி-நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 போ் கொல்லப்பட்டனா். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வன்முறையைக் கைவிட்டு மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்கள் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென மாநில முதல்வா் கெம்சந்த் சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments