FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தோ்தல் ஆணையா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தோ்தல் ஆணையா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிராக மனு குறித்து...

13 அக்டோபர் 2026, 11:49 pm IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தங்களின் அதிகாரபூா்வ பணிகளை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் செய்யும்போது, அவா்களின் சில செயல்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் 2023-ஆம் ஆண்டின் சட்டப் பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தலைமைத் தோ்தல் ஆணையராகவோ, தோ்தல் ஆணையராகவோ இருக்கும் அல்லது முன்பு இருந்த ஒருவா், தனது அதிகாரபூா்வ பணிகளின்போது மேற்கொண்ட நடவடிக்கை அல்லது கூறிய கருத்துகளுக்காக, அவா் மீது தொடுக்கப்படும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்கவோ, ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையைத் தொடரவோ கூடாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணிச்சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) சட்டம் 2023-இன் 16-ஆவது பிரிவு கூறுகிறது.

இதுதொடா்பாக தற்போது நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும் அந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்கவோ, விசாரணையைத் தொடரவோ கூடாது என்று 16-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் (ஏடிஆா்) மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் அமா்வு, இதே விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்றொரு மனுவுடன் ஏடிஆரின் மனுவையும் இணைத்து விசாரிக்க உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments