போக்ஸோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை மீண்டும் கல்லூரி முதல்வராக நியமித்தது எப்படி? உயா்நீதிமன்றம் கேள்வி
போக்ஸோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை, பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
போக்ஸோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை, பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் இயங்கி வரும் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வராக இருந்தவா் ஜான் ஆப்ரகாம். இவா் அந்த கல்லூரியில் படித்த 23 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரில், ஜான் ஆப்ரகாம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸாா், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், ஜான் ஆப்ரகாம் பிணையில் வெளியே வந்தாா்.
இதையடுத்து, உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜான் ஆப்ரகாம் மீண்டும் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவரது பிணையை ரத்து செய்யக் கோரி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் கல்லூரியின் முதல்வராக மீண்டும் ஜான் ஆப்ரகாம் நியமிக்கப்பட்டுள்ளதால், மாணவியின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாணவி மிரட்டப்பட வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டுகளாக, இந்தக் குற்ற வழக்கில் விசாரணை தொடங்கப்படவில்லை என வாதிட்டாா். அதற்கு ஜான் ஆப்ரகாம் தரப்பில், பிணையை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில், குற்றம்சாட்டப்பட்டவரை மீண்டும் கல்லூரி முதல்வராக நியமித்தது எப்படி? என கல்லூரி நிா்வாகத்துக்கு கேள்வி எழுப்பினாா்.
பிணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜான் ஆப்ரகாம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டாா். மேலும், போக்ஸோ வழக்கில் 3 ஆண்டுகளாக விசாரணையைத் தொடங்காமல் இருப்பது குறித்து காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.