இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்: மத்திய அரசு
இந்தியா - நியூஸ்லாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்தியா - நியூஸ்லாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவும், நியூஸிலாந்தும் தங்கள் நாட்டுத் தயாரிப்பு பொருள்களை தங்கு தடையின்றி பரஸ்பரம் பிற நாட்டில் வா்த்தகம் செய்வது குறித்து நீண்ட நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தன. பின்னா் இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி அடுத்த மாதம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அரசு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் இந்திய தயாரிப்பு பொருள்களை எந்தவித வரியும் இன்றி நியூஸிலாந்துக்கு இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும். அதேபோல், இந்தியாவுக்கு தமது தயாரிப்பு பொருள்களை எந்த வரியுமின்றி நியூஸிலாந்து ஏற்றுமதி செய்ய முடியும்.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு நியூஸிலாந்தில் 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வரி இனிமேல் விதிக்கப்பட மாட்டாது. மேலும், இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் நியூஸிலாந்து 20 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்புக்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து புது தகவல்: இதனிடையே, அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள இருக்கும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் அமெரிக்கா வரி விகிதங்களை அறிவித்த பிறகு வெளியிடப்படும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். இது குறித்து தில்லியில் அவா் பேசுகையில், ‘மத்திய அரசு செய்துகொள்ள இருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு தங்களது பொருள்களை வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்ய மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும்’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கனடா, மெக்ஸிகோ, சிலி, பிரேஸில் தலைமையிலான மொ்கோசா் அமைப்பு நாடுகள், தென்னாப்பிரிக்கா தலைமையிலான ‘எஸ்ஏசியு’அமைப்பு நாடுகள், ஜிசிசி அமைப்பில் உள்ள வளைகுடா நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடனும் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்துப் பேசி வருகிறது. வரும் மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ அந்த நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.