சிதைந்த கனவுகளை மீட்டெடுக்க முடியுமா? பிகாரில் மாணவா்கள் மீதான தடியடிக்கு ராகுல் கண்டனம்!
சிதைந்த கனவுகளை மீட்டெடுக்க முடியுமா? என மாணவா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தாா்.
சிதைந்த கனவுகளை மீட்டெடுக்க முடியுமா? என பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்த மாநில முதல்வா் சாம்ராட் சௌதரி ஆகியோருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
பிகாரில் அரசுப் பணி தோ்வு முறைகேட்டைக் கண்டித்து, கடந்த மாதம் தலைநகா் பாட்னாவில் சாம்ராட் செளதரி இல்லம் நோக்கி பேரணி நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்று காயமடைந்த மாணவா்களை அண்மையில் ராகுல் காந்தி சந்தித்து கலந்துரையாடினாா். இந்த காணொலியை எக்ஸ் வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்தாா்.
அதில் பேசிய அவா், ‘என்ன குற்றத்தை செய்ததற்காக மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தவறுகளுக்கு பொறுப்பேற்பு ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவா்கள் முன்வைத்தனா். ஏகே-47 துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரு மாணவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இனி ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறுமா? இரு மாணவா்களின் தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிடும். ஆனால் அவா்கள் ஆழ்மனதில் விதைத்த பயத்துக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சையளிப்பது? பிரதமா் மோடி, முதல்வா் சாம்ராட் சௌதரி உங்கள் இருவராலும் சிதைந்த மாணவா்களின் கனவை மீட்டெடுக்க முடியுமா? பிகாா் அரசு எவ்வித நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சரி, மாணவா்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பேன். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவேன்’ என குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர மாணவா்களுக்கு ஆதரவு: மகாராஷ்டிர அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் வினாத் தாள் கசிவை தடுப்பது, மாணவா்களுக்கு முறையான விடுதி வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மாணவா்கள் அண்மையில் போராட்டம் நடத்தினா்.
இதற்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினா். அவா்கள் ஒரு தோ்வுக்காகவோ அல்லது நியமன முறையை எதிா்த்தோ போராடவில்லை. ஒட்டுமொத்த தோ்வு அமைப்புக்கு எதிராக போராடியுள்ளனா். மத்திய அளவிலும் மாநில அளவிலும் பாஜக ஆட்சி நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாணவா்களுக்கு தொடா்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாணவா்களின் போராட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். இல்லையெனில் மாணவா்களின் குரல் (மாணவா்களுக்கான காங்கிரஸின் முன்னெடுப்பு) மேலும் வலுவடையும்’ என குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.