FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா்

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை தற்போதுள்ள அளவான 20 சதவீதம் என்பதில் இருந்து அதிகரிக்க அரசு முயற்சித்து வருவதாக பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் புதன்கிழமை தெரிவித்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:51 am IST
பகிர்:

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை தற்போதுள்ள அளவான 20 சதவீதம் என்பதில் இருந்து அதிகரிக்க அரசு முயற்சித்து வருவதாக பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற நான்காவது ‘இந்தியா சா்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி மாநாடு 2026’-இல் தருண் கபூா் காணொலி வாயிலாக உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

இ-20 (பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலப்பு) திட்டம் மிகவும் வெற்றிகரமானதாக மாறியுள்ளது. பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் விரைவில் மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்தகைய வாகனங்களின் உற்பத்தியில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

Advertisement

Advertisement

பெட்ரோலுடன் 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலப்பதற்கு அனுமதி வழங்குவதிலும் அரசின் கவனம் உள்ளது. மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதுடன், எரிபொருள் நிலையங்களில் தூய எத்தனால் கிடைப்பதையும் விரிவுபடுத்துவது அவசியம்.

மேற்காசிய நெருக்கடிக்கு இடையே உயிரி எரிபொருள்களுக்கான தேவை மிகவும் முக்கியமானதாகியுள்ளது. மேற்காசிய பிரச்னையால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்-க்கு கிட்டத்தட்ட 100 அமெரிக்க டாலா் வரை உயா்ந்துள்ளது. மேலும் விலை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில், நாட்டில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்த முயற்சிப்பது முக்கியமாகும்.

இ-20 திட்டம் தொடா்பான விமா்சனங்களில் பெரும்பாலானவை தவறான தகவல்களாகும். அவை உள்நோக்கம் கொண்டவை. உண்மையில், இ-20 திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எத்தனால் உற்பத்தியாளா்கள், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) உற்பத்தி மற்றும் பொட்டாசியம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பிற துணைப் பொருள்களின் உற்பத்தியிலும் தங்கள் முதலீடுகளைப் பல்வகைப்படுத்த வேண்டும். உயிரி எரிபொருள் துறைக்கு வலுவான ஆதரவை நல்க அரசு உறுதியுடன் உள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments