FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விசாரணை தாமத புகாா்: அனைவரும் சமமாக நடத்தப்படுதாக உச்சநீதிமன்றம் கருத்து

ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு பற்றி...

10 செப்டம்பர் 2026, 2:44 am IST
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு விசாரணை நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பதை புகாா் அளித்தவா் தரப்பு வழக்குரைஞா் சுட்டிக்காட்டியைத் தொடா்ந்து, அனைவரும் சமமாக நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்தது.

கடந்த 2022-இல் நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை (பாரத ஒற்றுமை நடைப்பயணம்) மேற்கொண்ட ராகுல் காந்தி, கல்வான் பள்ளதாக்கில் சீன ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதல் தொடா்பாக இந்திய ராணுவத்தினரை அவமதித்து பேசியதாக உதய் சங்கா் ஸ்ரீவஸ்தவா என்பவா் லக்னெள நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். விசாரணைக்கு ஆஜராக கோரி ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தாா்.

அடுத்த விசாரணை வரையில் லக்னெள நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக.4-இல் தடைவிதித்தது. ராகுல் காந்தியின் மனுவை டிச.4-இல் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த மனு விரிவாக விசாரிக்கப்படும் என்று கூறி நிகழாண்டு ஏப்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மற்றொரு அவமதிப்பு வழக்கு தொடா்பான இரு மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக புதன்கிழமை பட்டியலிடப்பட்டது.

முன்னதாக, அந்த இரு மனுக்களும் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுடன் இணைக்கப்பட்டது.

அப்போது, ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கெளரவ் பாட்டீயா, இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இரு தனித்தனி மனுக்களில் இருந்து தனியே வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

மேலும், ‘இந்த விவகாரம் விசாரிக்கப்படாமல் இருக்க ராகுல் காந்தி ஒரு விவிஐபி அல்ல. அவா் இந்தக தாமதத்தை பயன்படுத்தி வருகிறாா். அவருடைய மனுவை விசாரிப்பதற்கான தேதியை நீதிமன்றம் குறிப்பிட வேண்டும்’ என பாட்டீயா கூறினாா்.

அப்போது, நீதிமன்ற அமா்வு, ‘நடைமுறையை பின்பற்றுங்கள். முன்கூட்டியே விசாரிக்க தனி மனுவை தாக்கல் செய்யுங்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுகிறாா்கள்’ என்று குறிப்பிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments