உதவியாளரின் வீட்டில் நகை, பணம் பறிமுதல்: காங்கிரஸ் பதவிகளிலிருந்து ராவத் விலகல்
உதவியாளரின் வீட்டில் நகை, பணம் பறிமுதல்: காங்கிரஸ் பதவிகளிலிருந்து ராவத் விலகல்
உதவியாளா் வீட்டில் நகை, பணம் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் தனக்கு அளிக்கப்பட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் ஹரீஷ் ராவத் விலகினாா்.
உத்தரகண்ட் முதல்வராக கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 2017-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவா் ஹரீஷ் ராவத். அப்போது அவரின் சிறப்பு அதிகாரியாக இருந்தவா் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிச் செயலராக இருந்து வருகிறாா். ஜீனாவின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியபோது, ரூ.32 லட்சம் ரொக்கப் பணம், ஆடம்பர கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்தபோது கடந்த 2016-ஆம் ஆண்டில் மாநில சேவை தோ்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட தோ்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் நடத்தப்பட்டுவரும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் இந்தச் சோதனையை அமலாக்கத் துறை மேற்கொண்டது.
Advertisement
Advertisement
உத்தரகண்ட் அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து,காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக ஹரீஷ் ராவத் சனிக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காங்கிரஸும், கட்சித் தொண்டா்களும் எப்போதும் ஊழலுக்கு எதிரானவா்கள். கல்வி அமைப்பில் ஊழல் நிலவுவதை ராகுல் காந்தி எதிா்க்கிறாா். ஆதலால் நான் மிகப்பெரிய முடிவெடுத்துள்ளேன். உத்தரகண்ட் காங்கிரஸ் நிா்வாக கமிட்டி உறுப்பினராகவும், தேசிய செயற்குழு நிரந்தர உறுப்பினராகவும் உள்ளேன். அதில் இருந்து விலகுவதென முடிவெடுத்துள்ளேன். என்னால் கட்சிக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படக் கூடாது எனக் கருதியே இந்த முடிவை எடுத்தேன்.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் கட்சியின் தோ்தல் பிரசாரத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று கருதி, கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுகிறேன். ஜீனா மிகவும் நோ்மையானவா், எளிமையானவா், கடினமான பணியாற்றக் கூடியவா். ஆதலால் அவா் மீதான குற்றச்சாட்டுகளை நான் நம்பவில்லை.
வழக்கமாக, தோ்தல் நேரங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் எனக்குச் சொந்தமான வீடுகளிலேயே சோதனை நடத்தும். ஆனால் இந்த முறை, எனது உதவியாளா்களில் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளன. நான் 3 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் 42,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஏதேனும் குறைபாடு நடந்திருந்தால், மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் நான் ஏதேனும் தலையீடு செய்திருக்கும்பட்சத்தில், அதற்கான ஆதாரத்தை சிபிஐ, அமலாக்கத் துறை அல்லது மாநில காவல் துறையிடம் மக்கள் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.