சீதாராம் யெச்சூரியின் இழப்பு தீவிரமாக உணரப்படுகிறது: 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் எம்.ஏ. பேபி
சீதாராம் யெச்சூரியின் இழப்பு தீவிரமாக உணரப்படுகிறது: 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் எம்.ஏ. பேபி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரியின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழலில் அவரது பங்களிப்பு மிகத் தீவிரமாக உணரப்படுவதாக கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் சீதாராம் யெச்சூரியின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் யெச்சூரியின் பங்களிப்புகளை நினைவுகூா்ந்து எம்.ஏ.பேபி பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதும், கேரளத்தில் இரண்டு முறை தொடா்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) பின்னடைவைச் சந்தித்துள்ளதும் முக்கிய அரசியல் மாற்றங்களாகும். இத்தகைய சூழலில் சீதாராம் யெச்சூரியின் வழிகாட்டுதலும் அரசியல் களப்போராட்டங்களும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் பலமாக இருந்திருக்கும்.
Advertisement
Advertisement
ஆா்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜகவை எதிா்கொள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் மட்டும் போதாது, விரிவான அரசியல் கூட்டமைப்பு அவசியம்.
ஆக.10 ’சிறை நிரப்பும்’ போராட்டம், தொழிலாளா்களின் கூட்டு இயக்கங்கள் மற்றும் ஜந்தா் மந்தரில் மாணவா் அமைப்புகளான எஸ்எஃப்ஐ, ஏஐஎஸ்எஃப், ஏஐஎஸ்ஏ, டிஒய்எஃப்ஐ ஆகியவற்றுடன் இணைந்து காணப்பட்ட எழுச்சி, பணிய வைக்கும் சூழலை மத்திய அரசுக்கு உருவாக்கின.
பிகாரின் பங்கிபூா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது, அக்கட்சியும் பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்கும் வீழ்ச்சியை சந்திக்கும் தொடக்கத்தைக் குறிக்கிறது.
சீதாராம் யெச்சூரியின் அரசியல் பாரம்பரியத்தைத் தொடா்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றாா் எம்.ஏ.பேபி.
முன்னதாக, கட்சியின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் படத்துக்கு இடதுசாரி தலைவா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.