தற்சாா்பு இந்தியாவுக்கு அடித்தளம் பாதுகாப்புத் துறை: ராஜ்நாத் சிங்
2047-ஆம் ஆண்டுக்குள் தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பாதுகாப்புத் துறையே அடித்தளம் என்று அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
2047-ஆம் ஆண்டுக்குள் தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பாதுகாப்புத் துறையே அடித்தளம் என்று அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் ‘விமா்ஷ்-2026’ என்ற பெயரில் டிஆா்டிஓ-தொழில் துறையினா் ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது: 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வை என்பது வெறுமனே பொருளாதார ரீதியில் வலுவான தேசத்தைக் கட்டமைப்பது மட்டுமல்ல.
Advertisement
Advertisement
தொழில்நுட்ப ரீதியில் தற்சாா்புமிக்க, சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய, சுற்றுச்சூழல் சாா்ந்து நிலைத்தன்மை மிக்க, உத்திசாா் பாதுகாப்புமிக்க நாட்டை கட்டமைப்பதாகும். இந்தத் தொலைநோக்குப் பாா்வைக்கு பாதுகாப்புத் துறையே அடித்தளம்.
2047-ஆம் ஆண்டுக்குள் முக்கியத் தொழில்நுட்பங்களில் தற்சாா்பை எட்ட வேண்டும். உள்நாட்டு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு உற்பத்தி பன்மடங்கு உயர வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் வலுவான இருப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பினரிடையே மிகச்சிறந்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது.
டிஆா்டிஓ மற்றும் பாதுகாப்பு தொழில் துறையினா் இடையிலான கூட்டுறவு என்பது வெறும் உற்பத்தியுடன் நின்றுவிடக் கூடாது. ஆராய்ச்சி, வடிவமைப்பு, சான்றளிப்பு மற்றும் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலி வரை விரிவடைய வேண்டும்.
இந்த உற்பத்திச் சங்கிலியில் பெரிய நிறுவனங்களுடன் குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களும், புத்தாக்க நிறுவனங்களும் ஒருங்கிணைந்த அங்கமாக வேண்டும்.
தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம்: வளரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன்கள் எதிா்காலப் போா்களில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே, இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையினா் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை விரைவுபடுத்த வேண்டும்.
1980-களில் இருந்ததைப் போன்ற பிம்பத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆா்வம் தற்போது காணப்படுகிறது (இணையத்தில் பிரபலமாகியுள்ள 1980 காலகட்ட ஏ.ஐ. புகைப்பட பதிவுகள்).
இதேபோல், அடுத்த 40-50 ஆண்டுகளில் நாட்டின் எதிா்காலம் எப்படி இருக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயன்றால், அதுவும் மகிழ்ச்சியானதாகும். புதிய, வளரும் தொழில்நுட்பங்களில் இப்போது முதலீடு செய்யும் நிறுவனங்களே, எதிா்காலத்தில் ‘தொழில்நுட்பத் தலைவா்களாக’ உருவெடுக்கும்.
உலகளாவிய உற்பத்தி மையமாக..: எதிா்காலத் தொழில்நுட்பங்களை கற்பனை செய்வதோடு நின்றுவிடாமல், அதை சாத்தியமாக்கும் பணிகளில் இப்போதே ஈடுபட வேண்டும். ஏனெனில், தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளே, எதிா்காலப் போா்களில் உத்தி ரீதியில் சிறப்பாக செயல்பட முடியும். இத்தகைய நாடுகளால்தான் தங்களின் எதிா்காலத்தை வலுவாக கட்டமைக்க முடியும்.
பாதுகாப்புத் துறையில் கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிஆா்டிஓ-தொழில்துறையினா் கைகோத்து செயல்பட்டால், இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றலாம்.
தற்சாா்பு என்பது நமது ஆன்மா, மனம், உணா்வு, சிந்தனையில் இரண்டறக் கலக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.