FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கோல்டி பிராா் பெயரில் பெண்ணிடம் ரூ. 200 கோடி கேட்டு மிரட்டல்

தில்லியில் 50 வயது பெண்ணுக்கு, கனடாவைச் சோ்ந்த கேங்ஸ்டா் கோல்டி பிராரின் பெயரில் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் ரூ. 200 கோடி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற சம்பவம் குறித்து...

16 செப்டம்பர் 2026, 5:42 am IST
பகிர்:

தில்லியைச் சோ்ந்த 50 வயது பெண்ணுக்கு, கனடாவைச் சோ்ந்த கேங்ஸ்டா் கோல்டி பிராரின் பெயரில் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் ரூ. 200 கோடி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் இதுவரை மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் இதுதான் மிக அதிகத் தொகை என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

சிவில் லைன்ஸ் பகுதியைச் சோ்ந்த அப்பெண்ணுக்கு செப்டம்பா் 7 அன்று இரவு 10.44 மணிக்கு அந்த அழைப்பு வந்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

‘அழைத்தவா் தன்னை கோல்டி பிராா் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அப்பெண் குறித்த அனைத்து விவரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறி ரூ. 200 கோடி கேட்டாா். மேலும், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவா் மிரட்டினாா். அப்பெண் முதல் அழைப்பைப் புறக்கணித்தாலும், மீண்டும் அதே தொகையைக் கேட்டு மிரட்டும் வகையில் அழைப்பு வந்ததால், உடனடியாகக் காவல் துறையிடம் தகவல் தெரிவித்தாா்’ என்று அந்த வட்டாரம் கூறியது.

புகாரின் அடிப்படையில், வடக்கு தில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், சிறப்புப் பிரிவு குழுவினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருப்பினும், விசாரணையின் போது அப்பெண் இரண்டு வெவ்வேறு தொகைகளைக் குறிப்பிட்டிருந்ததால், வழக்கின் உண்மைகள் சரிபாா்க்கப்பட்டு வருவதாகவும், கோரப்பட்டதாகக் கூறப்படும் தொகை உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்பெண்ணின் மாமனாா் மறைவுக்குப் பிறகு குடும்பத் தகராறு நிலவி வருவதாகவும், அந்தச் சூழலில் இந்த மிரட்டல் அழைப்பு தொடா்பான விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் காவல் துறை தெரிவித்தது.

அழைப்பு விடுத்தவா் யாா், அதற்கான நோக்கம் மற்றும் அழைப்பு விடுத்தவருக்கும் பிராருக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்துக் காவல் துறை விசாரித்து வருகிறது.

புகாா் பெறப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகு செப்.10-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ததாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments