இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்ததில் சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்
இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதில் நாட்டின் முதல் துணைப் பிரதமரான சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு வகித்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம்
இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதில் நாட்டின் முதல் துணைப் பிரதமரான சா்தாா் வல்லபபாய் படேல் முக்கியப் பங்கு வகித்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா்.
நாடு 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, ஹைதராபாத் தனித்து சமஸ்தானமாக செயல்பட்டு வந்தது. இந்தியாவுடன் அந்த சமஸ்தானத்தை இணைக்க ஹைதராபாத் ஆட்சியாளரான நிஜாம் மறுத்துவிட்டாா். இதையடுத்து, 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
ஆதலால் ஆண்டுதோறும் செப்டம்பா் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஹைதராபாதில் வியாழக்கிழமை அந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றியதாவது:
Advertisement
Advertisement
சுதந்திர இந்தியாவில் முக்கிய அத்தியாயம் முடிந்த நிகழ்வை 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி குறிக்கிறது. அன்றைய நாளில்தான் ‘ஆபரேஷன் போலோ’ மூலம் இந்தியாவுடன் ஹைதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது.
ஹைதராபாத் விடுதலை தினம் வரலாற்றில் நினைவுகூரும் முக்கியமான ஒரு தினம் மட்டும் கிடையாது. அது தேசத்தை கட்டியெழுப்பும் பயணம், பாரதத்தை ஒன்றாக இணைக்கும் விழுமியங்களை நினைவூட்டும் ஒரு நிகழ்வும் ஆகும்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைக்கும் விவகாரத்தில் ஹைதராபாத் மிகவும் சவாலாக இருந்தது. ஹைதராபாத் சமஸ்தானத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி ஆபரேஷன் போலோ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி நிறைவடைந்தது. ஹைதராபாதின் நிஜாம் ஆதரவு படைகள் சரணடைந்தன.
நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வந்ததிலும், இந்தியாவுடன் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதிலும் முதல் துணைப் பிரதமரான படேல் பெரும் பொறுப்பு வகித்தாா். வலுவான மற்றும் ஒன்றிணைந்த ஒரே பாரதத்துக்கு படேல்தான் அடித்தளமிட்டாா்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியும், நேதாஜியும் பெரும் பங்கு வகித்த நிலையில், இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்ததில் படேல் முக்கியப் பங்கு வகித்தாா். அதேபோல், பிரதமா் மோடி தற்போது 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் முக்கியப் பணியைச் செய்து வருகிறாா் என்றாா் அவா்.
முன்னதாக, செகந்திராபாதில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்துக்குச் சென்று சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் தெலங்கானா ஆளுநா் சிவ் பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், ஜி கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய் குமாா், மல்காஜ் கிரி எம்.பி. எடேலா ராஜேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.