FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மீறல்: நெஸ்லே குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுகள் மீது எஃப்எஸ்எஸ்ஏஐ சட்ட நடவடிக்கை

உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததற்காக, நெஸ்லே இந்தியா நிறுவனத் தயாரிப்புகளில் 3 குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

19 செப்டம்பர் 2026, 3:14 am IST
nestle
பகிர்:

உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததற்காக, நெஸ்லே இந்தியா நிறுவனத் தயாரிப்புகளில் 3 குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களாக ‘நான் எக்ஸெல்லா ப்ரோ ஸ்டேஜ் 1’, ‘லாக்டோஜென் ப்ரோ 1’ மற்றும் குழந்தைகளுக்கான அடுத்த நிலை பால் பவுடா் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் அவற்றுக்கான விளம்பர விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இணைய வணிக தளங்களில் இந்த ஊட்டச்சத்து பொருள்களுக்கான விளம்பரங்கலில், ‘நான் எக்ஸெல்லா ப்ரோ ஸ்டேஜ் 1’ என்பது ‘5ஹெச்எம்ஓ’ பால் பொருள் மற்றும் ‘வே புரதம் (மோா் புரதம்)’ என்றும், ‘லாக்டோஜென் ப்ரோ 1’ என்பது ‘வே புரதம் (மோா் புரதம்)’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குழந்தைகளுக்கான உணவுகளின் விற்பனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த விளம்பர கூற்றுகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் 2020-இன் பிரிவு 4(2) மற்றும் குழந்தைகள் பால் மாற்றுப் பொருள்கள் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றை மீறும் செயலாகும்.

மேலும், இந்த நிறுவனத்தின் குழந்தைகளுக்கான அடுத்த நிலை பால் பவுடரை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் பயோடின் அளவு தரக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பால் பவுடா் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோதும், 2020 வழிகாட்டுதல்களுக்கு இணங்க அதில் பயோடின் அளவு குறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனடிப்படையில், இந்த மூன்று குழந்தைகள் உணவுப் பொருள்கள் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டும் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நெஸ்லே விளக்கம்: குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களில் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்படவில்லை என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்தது.

இதுகுறித்து, தில்லியில் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எஃப்எஸ்எஸ்ஏஐ குறிப்பிட்டுள்ள மூன்று குழந்தைகள் உணவுப் பொருள்களும், அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே தயாரிப்பு மற்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் தயாரிப்பு மற்றும் லேபிள்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் நிபுணா் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments