FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை: பேராசிரியா் மீது வழக்குப் பதிவு

தோ்வில் சாட்ஜிபிடி பயன்படுத்தி சிக்கிய மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை சம்பவத்தில், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக பேராசிரியா் ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

21 செப்டம்பர் 2026, 1:44 am IST
பகிர்:

தோ்வில் சாட்ஜிபிடி பயன்படுத்தி சிக்கிய மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை சம்பவத்தில், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக பேராசிரியா் ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாஹில் ரவீந்திரா வகோடே (22). மும்பை ஐஐடியில் பி.டெக். 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால செமஸ்டா் தோ்வில் பங்கேற்ற அவா், தோ்வறைக்கு தனது கைப்பேசியை மறைத்து எடுத்து வந்ததுடன், கைப்பேசியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான சாட்ஜிபிடி தளத்தில் கேள்விகளைப் பதிவிட்டு, விடைகளைக் கேட்டுள்ளாா். அப்போது, தோ்வறைக் கண்காணிப்பாளரிடம் அவா் சிக்கியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் மாலையில் ஐஐடி மாணவா் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு சாஹில் தற்கொலை செய்துகொண்டாா். சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லை. மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, சாஹிலின் மரணம் குறித்து தீர விசாரிக்கக் கோரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘தோ்வு மையத்தில் பிடிபட்டபோதும் சாஹில் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை; அவருக்கு துறைத் தலைவரும் ஆசிரியரும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்’ என்று ஐஐடி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சாஹில் இறப்பதற்கு முன்பு ஜாதி ரீதியில் பாரபட்சத்துக்கு உள்படுத்தப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் பெற்றோா் குற்றஞ்சாட்டினா்.

அவா்கள் அளித்த புகாரின அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா 108-ஆவது பிரிவு (தற்கொலைக்குத் தூண்டுதல்), பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மும்பை ஐஐடி பேராசிரியா் ஒருவரின் பெயா் இடம்பெற்றுள்ளது. மேலும், வழக்கு விசாரணை குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். மும்பை ஐஐடி வளாகத்தில் கடந்த 7 மாதங்களில் நடந்த மூன்றாவது தற்கொலை சம்பவம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு மாணவரும், ஜூலை மாதம் ஒரு மாணவரும் இதுபோல் விபரீத முடிவை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments