மாணவர் தற்கொலை விவகாரம்: ஐஐடி மும்பை இயக்குநர் ராஜிநாமா செய்யவில்லை!
ஐஐடி மும்பையில் மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி இயக்குநர் ராஜிநாமா செய்யவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி மும்பையில் மாணவர் தற்கொலை செய்ததன் காரணமாக எழுந்த போராட்டத்தால், ஐஐடி இயக்குநர் ராஜிநாமா செய்யவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் ராஜிநாமா செய்யவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்லூரித் தேர்வின்போது, செல்போனில் ஏஐ பயன்படுத்தி தேர்வை எழுதியபோது, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் மாணவர் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் தனது ஹாஸ்டல் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு மாணவர் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிபட்ட மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐஐடி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. மேலும் அவரது வகுப்பு பேராசிரியர் மூலம், மாணவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு உறுதி மொழி பெறப்பட்டதாகவும், நடவடிக்கை எடுத்தால் அவரது கல்வி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு கல்வி நிறுவன ரீதியான துன்புறுத்தல்கள், சாதி பாகுபாடு, இடைநீக்கம் செய்யப்படுவதாக கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டியலினத்தோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் பேராசிரியர் சூர்யநாராயண டோலா என்பவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் மன நலனைக் கருத்தில் கொள்வதில்லை என்று கூறி ஐஐடி மும்பை வளாகத்தில் மாணவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 கோரிக்கைகளை முன்வைத்த மாணவர்கள், அதனை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக ஐஐடி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், ஐஐடி மும்பை இயக்குநரும் பேராசிரியருமான ஷிரீஷ் கெடாரே தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் நேற்று பேசுகையில், "நான் ராஜினாமா செய்வேன். ஆனால், நான் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். திங்களன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு எனது முடிவைத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விவாதிக்க ஐஐடி நிர்வாகம் இன்று கூடுவதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஐஐடி மும்பை இன்று வெளியிட்ட பதிவில், “மாணவர் சாஹிலின் துரதிர்ஷ்டவசமான மறைவு தொடர்பான சூழல்கள் குறித்து எங்களது முந்தைய அறிக்கையில் இடம்பெற்ற கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்சம்பவத்தின் பின்னணி விவரங்கள் மற்றும் சூழல்கள் போன்றவை அதிகாரிகளின் விசாரணைக்கு உள்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது மறைவுக்கு முந்தைய நிகழ்வுகள் குறித்த விவரங்களை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்துவதற்கு முன்பே அது குறித்து கருத்து தெரிவித்ததோ பொருத்தமற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, “ஐஐடி மும்பை இயக்குநர் ராஜினாமா செய்யவில்லை. அது தொடர்பான செய்தி பொய்யானது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Student suicide issue: IIT Bombay Director has not resigned!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.