பிகாரில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: குற்றவாளியைக் காலில் சுட்டுப் பிடித்த போலீஸ்!
பிகாரில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஒரு கும்பல் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தனர்.
பிகாரில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஒரு கும்பல் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தனர்.
பிகார் மாநிலத்தின் ஜமுய் நகரில் செப். 19 அன்று மாலை பத்தாம் வகுப்பு மாணவியும், அவரது ஆண் நண்பரும் பயிற்சி வகுப்பு முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆண்கள் கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தாக்கியது. இருவரையும் அடித்து துன்புறுத்திய கும்பல், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது.
Advertisement
Advertisement
அவர்களைத் துன்புறுத்திய கும்பலின் காணொலிகள் இணையத்தில் பரவிய நிலையில், வாகன பதிவு எண்ணைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வஜீத் தயாள் தெரிவித்தார்.
அவர் இதுபற்றிப் பேசுகையில், "இச்சம்பவம் நடைபெற்று 2 நாள்கள் ஆகியும், அந்த மாணவனோ அல்லது மாணவியோ எங்களிடம் புகார் அளிக்கல்லை. அந்தக் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நாங்களே பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்தோம்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜமுய் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய காணொலிகளைக் கொண்டு மாணவர்களைத் துன்புறுத்தியதாகக் கருதப்படும் சுமார் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
காணொலியில் காவித் துணியால் முகத்தை மூடியிருந்த ஒருவன், மாணவர்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி, மாணவியிடம் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. நந்தன் யாதவ் என்கிற அந்த நபர் வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்,
இன்று, அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நந்தன் யாதவ்வின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபருடன் மேலும் ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அந்தக் காணொலிகளைப் பரப்புபவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். காணொலிகளைப் பரப்பிய 132 சமூக ஊடகப் பக்கங்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
In Bihar, after a gang sexually harassed a Class 10 student, the police apprehended the prime suspect by shooting him in the leg.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.