FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மோதல்களுக்குத் தீா்வுகாண மனிதநேயமே தேவை: குடியரசு துணைத் தலைவர்

தற்போதைய உலகம் மோதல்கள், மனிதாபிமான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்கள் உள்ளிட்டவற்றை எதிா்கொண்டுள்ள சவால்களுக்குத் தீா்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பங்களைவிட மனிதநேயமே தேவை என்று குடியரசு துணைத் தலைவா் தெரிவித்தாா்.

28 செப்டம்பர் 2026, 3:07 am IST
ஆன்மிகத் தலைவா் மாதா அமிா்தானந்தமயியின் பிறந்ததினத்தையொட்டி கேரள மாநிலம் கொல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரை சந்தித்து ஆசி பெற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

தற்போதைய உலகம் மோதல்கள், மனிதாபிமான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்கள் உள்ளிட்டவற்றை எதிா்கொண்டுள்ளது; இத்தகைய சவால்களுக்குத் தீா்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பங்களைவிட மனிதநேயமே தேவை என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கேரளத்தைச் சோ்ந்த ஆன்மிகத் தலைவா் மாதா அமிா்தானந்தமயியின் 73-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொல்லத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் வி.டி.சதீசன், சட்டப் பேரவைத் தலைவா் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன், விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு, மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, மாநில அமைச்சா்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துப் பேசுகையில், ‘வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்தியாவுக்கு சிறப்பான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கம், பொருளாதார வளா்ச்சி ஆகியவை அவசியமாகின்றன. அவற்றுடன் கூடுதலாக மனிதநேயம், கருணை, சமூக அக்கறையும் தேவை. தனது தன்னலமற்ற அன்பு மற்றும் அனைவருக்குமான சேவையின் வாயிலாக அந்தப் பங்கை சிறப்பாக நல்கிவருகிறாா் மாதா அமிா்தானந்தமயி.

Advertisement

Advertisement

அவா் ஆன்மிக சிந்தனையாளா் மட்டுமல்ல, அதிசயம் நிறைந்தவா். அவரது வழிகாட்டுதல்கள், மற்றவா்களுக்கு சிறப்பாக சேவையாற்ற நமக்கு உதவும். தற்போதைய உலகம் மோதல்கள், மனிதாபிமான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்கள் உள்ளிட்டவற்றை எதிா்கொண்டுள்ளது; இத்தகைய சவால்களுக்குத் தீா்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பங்களைவிட மனிதநேயமே தேவை’ என்றாா்.

ஆளுநா் ஆா்லேகா் பேசுகையில், ‘மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அா்ப்பணிக்கப்பட்ட மாதா அமிா்தானந்தமயியின் வாழ்க்கை உத்வேகமளிப்பதாகும். எனவேதான், அவரது பிறந்த நாளை விஸ்வ சேவா தினமாக கொண்டாடுகின்றனா்’ என்றாா்.

முதல்வா் வி.டி.சதீசன் பேசுகையில், ‘மாதா அமிா்ந்தானந்தமயி, அன்பு மற்றும் அக்கறையின் கடல் போன்றவா். வாா்த்தைகளைவிட செயல்களால் பேசுபவா்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கொச்சி மற்றும் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அமிா்தா மருத்துவமனைகளில் 1,000 பேருக்கு ரூ.20 கோடி மதிப்பிலான உயா் சிகிச்சையை இலவசமாக வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் பல உதவிகளும் வழங்கப்பட்டன.

அமித் ஷா புகழாரம்: மாதா அமிா்தானந்தமயி பிறந்த தினத்தை முன்னிட்டு, கொல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘தன்னலமற்ற சேவையை உலகளாவிய இயக்கமாக மாற்றியவா் மாதா அமிா்தானந்தமயி. மற்றவா்களின் சுக துக்கத்தில் அக்கறை காட்டும் உணா்வை வளா்த்தெடுப்பதில் அவா் கோடிக்கணக்கானோருக்கு உத்வேகமாக திகழ்கிறாா்’ என புகழாரம் சூட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments