முகப்பு
சிறப்புச் செய்திகள்

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?

தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி இன்னமும் வராதது பற்றி...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:31 AM
ராகுல் காந்தி - ANI
பகிர்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் முனைப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு வராமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது.

இதற்கிடையே, திருநெல்வேலியில் பிரசாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் நிற்கிறது என்று ஒரு குண்டை வீசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 14 நாள்களே இருக்கின்றன. பிரசாரம் மேற்கொள்ள 12 நாள்களே அவகாசம் உள்ளன.

Advertisement

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து தொடர்ந்து 5-வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ்.

இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர, திமுகவிடம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. பலகட்டப் பேச்சுவார்த்தைக்கு பின், கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகளைக் கூடுதலாகவும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெறுவதில் வெற்றியும் கண்டது.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் மார்ச் 4 ஆம் தேதி இரவு கையொப்பமானது. கிட்டத்தட்ட 35 நாள்களைக் கடந்துவிட்டன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மார்ச் 28 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 12 நாள்கள் ஆகின்றன.

ஆனால், பிரசாரம் நிறைவடைய 12 நாள்களே இருக்கும் நிலையில், இன்னும் ஒருமுறைகூட மக்களால் பரவலாக அறியப்படும் காங்கிரஸின் அகில இந்திய தலைவர்களான காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவர்கூட தமிழ்நாடு பக்கம் வரவில்லை (உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சோனியா காந்தி, சமீபத்தில்தான் வீடு திரும்பினார். இவர், தேர்தல் பிரசாரம் எதிலுமே கலந்துகொள்ளவில்லை).

கேரளம் மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த கார்கே, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய மூவரும் ஒருமுறைகூட அருகிலுள்ள மாநிலமான தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

மாறாக, புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிய ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் விசிகவுக்கு எதிராக களமிறங்கியுள்ள போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 பேரை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக கூறப்படும் எம்பி மாணிக்கம் தாகூர் விலகினார்.

வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட எம்பி ஜோதிமணி, “நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற, தகுதியும்,மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன, கள அனுபவம் இல்லாத சிலருக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ, தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு.

இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும்,அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்தபிறகே விரிவாகப் பேச விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகளும், பேச்சுகளும், பதிவுகளும் களத்தில் பணியாற்றும் வேர்நிலைத் தொண்டர்களை தொய்வடைய வைத்துள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தாமதப்படுத்திய நிலையில், பிரசாரம் செல்லும் இடமெல்லாம் அறிவிக்கப்படாத வேட்பாளருக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மறுபுறம், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டு களத்தில் இறங்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி என மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு கூட்டணிக் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.

கடைசியாக ஏப்ரல் 3 ஆம் தேதி புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்த போதுகூட சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுச் சென்றார். பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் பல முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுவிட்டார்.

ஆனால், கூட்டணி இறுதியான பிறகு ஒருமுறைகூட கூட்டணியின் தலைவரான மு.க. ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. தொலைபேசியில் உரையாடியதாககூட செய்தி இல்லை.

”திமுகவுடனான கூட்டணி என்பது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எடுத்த முடிவு. அதனை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று தினமணிக்கு அளித்த நேர்காணலில் மாணிக்கம் தாகூர் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே, திருநெல்வேலியில் நேற்று (ஏப். 8) பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய், “பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் கையில் போட்டுக் கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான் உள்ளது” எனப் பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெகவுடன் நிற்கும் உண்மையான காங்கிரஸ் யார்? என்ற கேள்வி இணையத்தை ஆக்கிரமித்து விவாதப் பொருளாக மாற, விஜய் பேச்சுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புச் செயலர் ராம் மோகன் அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி, “தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகே பல முறை விஜய்யைச் சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களில் யார் யாருக்கு திமுகவுடன் கூட்டணி அமைத்ததில் மகிழ்ச்சி? அல்லது வருத்தம்? என்ற குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.

தமிழ்நாடு தேர்தலில் குழப்பமான அரசியல் செய்துவரும் காங்கிரஸ் நிர்வாகிகளால் திமுக தொண்டர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வருவார்களா? மு.க. ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் ராகுல் பிரசாரம் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே, தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்துக்கான காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இன்னும் 12 நாள்களே உள்ளன. கேரளம், புதுவை, அஸ்ஸாமில் இன்று, ஏப். 9, தேர்தல் வாக்குப்பதிவு முடிவுறும் நிலையில் ஒருவேளை இனியேனும் தமிழகம் வருவதைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிடுவார்களா? ராகுல் காந்தியின் பயணத் திட்டத்துக்காக காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளும் காத்திருக்கின்றன.

summary

TN Election Campaign! Has Rahul Gandhi forgotten Tamil Nadu? Or is he ignoring it?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments