பொறுப்பற்ற அரசு போக்குவரத்துக் கழகம்! நள்ளிரவில் பயணிகளைத் தவிக்க விட்ட மதுரைக் கிளை!
கோவை - மதுரைப் பயணத்தில் முன்பதிவு செய்த பயணிகளைத் தவிக்கவிட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரைக் கிளையின் அணுகுமுறை பற்றி...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரைக் கிளையின் பொறுப்பற்ற செயல்பாட்டால் கோவையில் சனிக்கிழமை நள்ளிரவில் கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர்; அலைக்கழிக்கப்பட்டனர்.
ஆக. 23 - ஞாயிற்றுக்கிழமை பலமான திருமண முகூர்த்த நாள். எனவே, ஆக. 22 - சனிக்கிழமை மாலையில் ஏராளமான வரவேற்பு நிகழ்வுகளும். சனிக்கிழமை காலையிலிருந்தே ரயில்களிலும் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
கோவையிலிருந்து மதுரைக்குச் செல்ல மதுரைக் கிளையைச் சேர்ந்த – ஆக. 22, இரவு 11.40-க்குப் புறப்படும் அரசு பேருந்தில் பலரும் – 30-க்கும் மேற்பட்டோர் - டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர் (பேருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் கடைசி நேரத்தில் பதிவு செய்த பயணியொருவர் தெரிவிக்கிறார்).
Advertisement
Advertisement
கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்குப் (அதுதான் ஊருக்கு நாலு பேருந்து நிலையங்கள் என்றாகிவிட்டதே, யாருக்குப் பலன் என்று தெரியவில்லை, நிச்சயம் மக்களுக்கு அல்ல; அலைச்சல்தான்) பயணிகள் வந்து சேருவதற்கே பல மணி நேரங்களாகிவிட்டது. அன்று நகரில் மிக மோசமான வாகன நெரிசல்.
இரவு 11 மணிக்கே முன்பதிவு செய்த 11.40 மணிப் பேருந்து எங்கே நிற்கும் என்று விசாரித்தால், இங்கேதான் எங்கேயாவது நிற்கும், விசாரித்துப் பாருங்கள் என்றுதான் எல்லாரும் – மதுரைக் கிளைப் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த கோவைக் கிளை அதிகாரிகள் – கைகாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இரவு 11.30 வரையிலும்கூட அந்தப் பேருந்து மட்டும் வரவேயில்லை.
ஒரே ஒரு பேருந்து ஓட்டுநர் மட்டும் மனமிறங்கி, எங்களுடைய இந்தப் பேருந்து இரவு 11.55 - க்குப் புறப்படும். முன்பதிவு செய்தவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 11.40 பேருந்து வழியில் எங்கேயாவது நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும்; வரும், காத்திருங்கள் என்று பதிலளித்துத் கொண்டிருந்தார்.
முன்பதிவு செய்திருந்த 11.40 மணி பேருந்துக்காக இரவு 9 மணிக்கெல்லாம் வந்துகூட வயதான ஒரு தம்பதி காத்துக் கொண்டிருந்தனர். மதுரைக் கிளை, கோவைக் கிளை பேருந்துகள் ஒவ்வொன்றாக வருகின்றன; கூட்டமோ கூட்டம். மக்கள் அடித்துப் பிடித்து, முட்டிமோதி இடம் பிடிக்கிறார்கள். அவை புறப்பட்டுப் போகின்றன. இரவு 12 மணி ஆன பிறகும் 11.40 பேருந்து வரும் வழியைக் காணோம்.
பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு முன்பதிவு செய்து பேருந்தைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் சுமார் 30 பேருக்கும் மேல் இருக்கலாம் என்பது. ஆக, 11.40 பேருந்துக்காக முன்பதிவு செய்திருந்த பெரும்பாலோர் தேடித்தேடி ஒரே இடத்தில் சேர்ந்துவிட்டனர்.
கோவை கிளை அலுவலகத்தில் இருந்த நேரக் கண்காணிப்பாளர்கள் அல்லது ஏதோ அலுவலர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்குத் தொடர்பில்லாத விஷயம்; மதுரைக் கிளையின் பொறுப்பாளர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டனர்.
சிறிது நேர மல்லுக்கட்டுக்குப் பிறகு, இரக்கப்பட்ட இரு அலுவலர்கள், எல்லாரையும் அழைத்துக்கொண்டு சென்று, சில மதுரைக் கிளை பேருந்து ஓட்டுநர்களிடமும் நடத்துநர்களிடமும் முன்பதிவு செய்துள்ள இவர்களை ஏற்றிச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே, எங்கள் பேருந்தில் முன்பதிவு செய்திருப்பவர்களை மட்டும்தான் ஏற்றிச் செல்வோம் என்று கூறி, சொல்லிவைத்தாற்போல மறுத்துவிட்டனர்.
முன்பதிவு செய்த பயணிகளிடம் அடையாளத்துக்கு ஆதார் எண்களை எல்லாம் கேட்டு வாங்கிப் பதிந்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பயணச் சீட்டில், ஏராளமான நிபந்தனைகள், யோசனைகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருந்தாலும், எந்தவோர் இடத்திலும் இப்படியோர் மோசமான நிலைமை ஏற்பட்டால், இக்கட்டு நேர்ந்தால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்? என்பது பற்றியோ, யார் பதிலளிக்கப் பொறுப்பானவர்கள் என்பது பற்றியோ மட்டும் எவ்விதத் தகவலும் இல்லை!
கோவைக் கிளை அலுவலர்கள் முயன்று, இதுபற்றி மதுரைக் கிளையில் தொடர்புகொள்ளக் கூடிய அலைபேசி எண் ஒன்றைப் பெற்றுப் பயணிகளிடம் தந்து, நீங்களே அழைத்துப் பேசுங்கள் என்று கேட்டுக்கொண்டனர் - 94875 99019. உடனடியாக பயணிகளில் ஒருவர் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசி, நிலைமையை விவரித்தார். அந்த எண்ணில் பேசியவர் இன்னோர் எண்ணைத் தந்து அவர்களிடம் பேசுமாறு கூறினார் – 94875 99130. அந்த எண்ணுக்கு அழைத்தபோது, அங்கிருந்தவரோ, தங்களுக்குத் தெரியாது, பழைய எண்ணிலேயே பேசுங்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பேசிக்கொண்டிருந்தபோதே கட் செய்தும்விட்டார். பிறகு இரு எண்களிலுமே அழைத்தால் ஒலித்தனவே தவிர யாரும் எடுக்கவேயில்லை.
நள்ளிரவு தாண்டி, 12.15 மணியாகிவிட்டது. வேறு வழியெதுவும் இல்லை. குழந்தைகளுடன் ஓடிப் பிடித்துத் திடீர் திடீரென வரும் பேருந்துகளில் எல்லாரும் ஏறுவதும் சிரமம். இன்னொரு முறை கட்டணமும் செலுத்த வேண்டும். அல்லாமல் நகர்ப் பேருந்துகளும் மதுரை என போர்டு போட்டு வரத் தொடங்கிவிட்டன.
11.40 கூட்டத்திலிருந்த ஒருவர் குரல் ஒலித்தது; நம்மைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. முன்பதிவு செய்துகொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் யாரிடம் கேட்பது, யார் பதில் சொல்வார்கள் என்றும் தெரியவில்லை. இனி வேறு வழியே இல்லை. பேருந்து நிலைய வாசலை மறித்து எல்லா பேருந்துகளையும் நிறுத்திவைப்போம்; ஏனென்று கேட்க வருவோரிடம் பேசுவோம் என்று குரல் கொடுத்தார். கடும் எரிச்சலில் அல்லாடிக் கொண்டிருந்த அனைவரும் நிலைய வாசலில் பேருந்துகளை வெளியேற விடாமல் மறித்து அமர்ந்துவிட்டனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. பேருந்துகளும் காத்துக்கொண்டிருந்தன.
இதனிடையே, கூட்டத்தில் யாரோ ஒருவர் சொன்ன யோசனைப்படி, காவல்துறை அவசர எண்ணான 100-க்கு அழைத்து ஒரு பெண்மணி, பிரச்சினை பற்றியும் நிலைமை பற்றியும் தகவலைத் தெரிவித்தார்.
இவற்றுக்கு நடுவே, கடமையுணர்ச்சி தவறாத மிகவும் நல்லவர்களான சில பேருந்து ஓட்டுநர்கள், வெளியேறும் வழியைத் தவிர்த்துவிட்டு, பேருந்துகள் உள்ளே வரும் வாசல் வழியே பேருந்துகளை எடுத்துச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்ததும் மிகவும் ஆவேசப்பட்ட ஒரு பயணி, மும்பைப் பெண் பாணியில், அந்த பேருந்தின் மீது சாய்ந்து மறித்து பேருந்தை நிறுத்திவிட்டார். மற்ற போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் இடையே ஒரே வாக்குவாதங்கள். ஆனால், பேருந்துகளை யாரும் வெளியேற விடவில்லை.
இதனிடையே, வாசலில் காவல்துறையின் ரோந்து வாகனம் வந்து நின்றது; நின்றுகொண்டே இருந்தது. என்ன செய்ததென தெரியவில்லை. இவ்வாறாக மணி 12.40-தையும் தாண்டிவிட்டது (பேருந்துகளில் தாவி ஏறி இடம் பிடிக்கும் சாகசத் திறன் கொண்ட சில பயணிகள் வேறு வேறு பேருந்துகளைப் பிடித்து மதுரைக்குப் புறப்பட்டு போய்விட்டனர்; ஒருகட்டத்தில் தங்கள் முயற்சிகளில் மனந்தளர்ந்து இப்படியே எல்லாரும் போய்விடுவார்கள் என்றுதான் போக்குவரத்துக் கழகத்தினர் நினைத்திருப்பார்கள் போல). பயணிகளை ஏற்றிய பேருந்துகளோ வெளியேற முடியாமல் ஸ்தம்பித்து நின்றுகொண்டிருந்தன.
நள்ளிரவில் அலைமோதும் பெருங்கூட்டத்துக்கு நடுவே கையறு நிலையில் விடப்பட்ட பயணிகளை எப்படியாவது மதுரை கிளைப் பேருந்துகளில் ஏற்றிவிட முயன்றவர்களில் ஒருவர் திடீரென கூட்டத்திடம் வந்து, 11.40-க்கு முன்பதிவு செய்தவர்கள் எல்லாரும் வாருங்கள்; பேருந்து வந்துவிட்டது. போகலாம் என்று அழைத்தார். கூட்டத்தைக் கலைக்க ஏதோ ஏமாற்றுகிறார்கள் என்று, சிலர் நகர மறுத்தனர். பிறகு உண்மையாகத்தான் கூறுகிறேன், வாருங்கள், பஸ் ஏற்றிவிடுகிறேன் என்று பயணிகள் அனைவரையும் அவர் அழைத்துச் சென்றார்.
ஏதோவொரு மதுரைக் கிளைப் பேருந்தில் பயணிகள் உள்ளே ஏற நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே பேசிவிட்டிருப்பார்கள் போல, நடத்துநரிடம் சொல்லி, ஒருவழியாக, முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரையும் அழைத்து முதலில் பேருந்துக்கு உள்ளே அனுப்பிய பிறகு மற்றவர்களை ஏற அனுமதித்தனர்.
தொடர்ந்து, 11.40 பேருந்துக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளின் முன்பதிவு பயணச் சீட்டின் பிஎன்ஆர் எண்ணைக் கேட்டுக் குறித்துக் கொண்டு, பயணச்சீட்டைத் தந்தார் நடத்துநர். ஆக, ஒருவழியாகக் காட்சிகள் முடிவுக்கு வந்து நள்ளிரவு சுமார் 1 மணிக்குப் பேருந்து புறப்பட்டது.
பேருந்துப் பயணத்துக்கு முன்பதிவு செய்து டிக்கெட் வழங்கிய போக்குவரத்துக் கழகத்துக்குப் பயணிகளைப் பற்றி எந்த அக்கறையுமில்லை. குறிப்பிட்ட பேருந்து சிங்காநல்லூருக்கே வரவில்லை என்பதுகூடத் தெரியவில்லை. முன்பதிவு செய்த 30-க்கும் மேற்பட்டவர்கள் என்ன செய்வார்கள்? மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பற்றியும் அக்கறையில்லை.
யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுகூட எங்கேயும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இரவில் ஒட்டுமொத்த பேருந்து நிலையத்தையும் மதுரைப் பதிவெண் கொண்ட ஒவ்வொரு பேருந்தாக ஓடி ஓடி, 11.40 மணி முன்பதிவுப் பேருந்தா? என்று கேட்டுக் கேட்டே நொந்துபோனார்கள் பயணிகள் (ஏனென்றால், பயணிகளிடம் இருக்கும் இ டிக்கெட்டில் பஸ் ஐ.டி. எண் என்று எம் 3484 என்றும் ரூட் எண் 26 ஜே என்றும்தான் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர, குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் பதிவு எண்கூட குறிக்கப்படவில்லை!).
ஒருவேளை துணிந்து பேருந்து நிலைய வாசலை மறிக்கும் யோசனையைக் குறிப்பிட்ட நபர் சொல்லாதிருந்தால், எல்லாருமாகத் தளர்ந்துபோய், வேறு வேறு பேருந்துகளைப் பிடித்து மதுரை போய்விடுவார்கள் என்றுதான் போக்குவரத்துக் கழகத்தினர் என்று நினைத்திருப்பார்கள்; எதிர்பார்த்திருப்பார்கள் போல (முன்யோசனையாக ஆன்லைன் பயணச்சீட்டில் டிக்கெட் பணத்தை ரீபண்ட் பெறுவதற்கான விசாரணை எண் மட்டும் தந்திருக்கிறார்கள்!).
இந்தப் பிரச்சினையைப் பொதுவானதாக்கி, தமிழ்நாட்டின் எல்லா பேருந்து நிலையங்களிலும் இதுதான் நிலைமை என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவ்வாறெல்லாம் இல்லை; எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பதாக ஒரேயடியாக மறுத்துவிடவும் முடியாது.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நேரிட்ட துயரத்தை ஒரு சோற்றுப் பதமாகக் கொண்டால்:
- குறிப்பிட்ட பேருந்து கோவை வரவில்லை; டிரிப் எடுக்க இயலாது என்று முன்னதாக ஏன் பயணிகளுக்கு – அங்கிருக்கும் அரசு போக்குவரத்துக் கழக கோவை கிளையினருக்கேனும் - தெரிவிக்கப்படவில்லை?
- முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ஏன் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யவில்லை? அதைச் செய்திருக்க வேண்டியவர்கள் யார்?
- குறிப்பிட்ட இரு தொலைபேசி எண்களில் இருந்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இரவில் என்ன செய்தார்கள்?
- இந்தக் களேபரத்துக்கும் பயணிகளுக்கு நேரிட்ட மன உளைச்சலுக்கும் பொறுப்பாக்கப்பட வேண்டியவர்கள் யார்? தவறுக்குப் பொறுப்பான - நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் யார்?
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய தருணங்களில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? அவர் எங்கிருப்பார்? அதையும்கூட எங்கிருந்து தெரிந்து கொள்வது? டிக்கெட்டில் எல்லாவற்றையும் சொல்பவர்கள் இதையும் சொல்லலாம்தானே!
சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கிற காலகட்டத்திலேயே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கிற ஏழை, எளிய நடுத்தர மக்களின் நிலைமை இதுதான். நள்ளிரவில் மக்களைத் தவிக்க விடும் சிங்காநல்லூர் துயரங்கள் தமிழ்நாட்டில் இனி எப்போதும் நேரிடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்தான்!
Irresponsible TN State Transport Corporation! Madurai branch leaves passengers stranded at midnight!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.