FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

வாட்ஸ்ஆப் - மத்திய அரசு இடையே ஐந்து ஆண்டு காலமாக நீடிக்கும் மோதல்! என்னதான் முடிவு?

வாட்ஸ்ஆப் - மத்திய அரசுக்கு இடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடிக்கும்..

Updated On : 13 ஜூலை 2026, 3:39 pm IST
வாட்ஸ்ஆப் - பிரதிப் படம்
பகிர்:

வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்த பயனர் பெயர் விவகாரத்தில், வாட்ஸ்ஆப் - மத்திய அரசுக்கு இடையே சண்டை வலுத்திருந்தாலும், இது இப்போது உருவானதுல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்ஆப் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளின் சண்டை வரலாறு மிக நீண்டதாக உள்ளது.

வாட்ஸ்ஆப்பால் முன்மொழியப்பட்ட 'பயனர் பெயர்' (username) மட்டும் தெரியும் வசதி குறித்து மத்திய அரசு ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டநோட்டீஸுக்கு வாட்ஸ்ஆப் விளக்கமளித்துள்ளது.

Advertisement

Advertisement

இது, முதல் முறையாக வாட்ஸ்ஆப் - மத்திய அரசுக்கு இடையே எழுந்த பிரச்னையல்ல. பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப் போராட்டத்தின் ஒரு புதிய அத்தியாயம் அவ்வளவே.

இங்கே வாட்ஸ்ஆப் (WhatsApp) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இடையிலான மோதல் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேதான் இருந்திருக்கிறது.

மோதல் ஆரம்பித்தது..

இருதரப்பு மோதல் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது.

அப்போதுதான் வாட்ஸ்ஆப் தனது தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்திருந்தது. பயனர்கள் மெட்டா நிறுவனத்துடன் தரவுப் பகிர்வு விதிமுறைகளை ஏற்க வேண்டும் அல்லது செயலியின் பயன்பாடடை நிறுத்த வேண்டும் என்பதே அது.

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது, அந்தக் கொள்கை மாற்றம் தொடர்பான விவகாரம் ஐந்து ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இந்திய நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு எந்த சர்ச்சையும் விரைவாக முடிக்கப்படுவதில்லை என்பதே மக்களிக் கருத்தாக உள்ளது.

அடுத்த சர்ச்சை ஒரு தகவலின் மூலத்தை கண்டறிதல்!

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் பிரிவு 4(2), கடுமையான குற்றங்கள் நிகழும்போது மத்திய அரசு கோரினால், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு தகவலையும், அதனை முதன் முதலில் அனுப்பிய மூலத்தை கண்டறிந்த சொல்ல வேண்டும் என்று வாட்ஸ்ஆப்-க்கு மத்திய அரசு வலியுறுத்தியது.

ஆனால், இதனை எதிர்த்து வாட்ஸ்ஆப் நீதிமன்றம் சென்றது. அதோடு நின்றதா? இவ்வாறு தகவலை அளிக்க வேண்டும் என்றால், பயனர்களின் கைரேகையைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது.

விசாரணை நடக்கிறது, வாட்ஸ்ஆப் சொல்வது என்னவென்றால், பயனர்களின் அடையாளத்தை பகிர்வது தங்களது கொள்கையில் இல்லை, கொள்கையை உடைப்பதைவிடவும், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதையே விரும்புவதாக நிறுவனத்தின் சட்டக் குழு நீதிமன்றத்தில் பலமுறை தெளிவுபடுத்தியது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் முழுமையான உரிமைகள் என எதுவும் இல்லை, நாங்கள் கேட்பது உரிமையின் நியாயமான வரம்பு என்று மத்திய அரசு வாதிட்டு வருகிறது. இதுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மத்திய அரசின் அதிரடி

வாட்ஸ்ஆப் மீதான தனியுரிமைக் கொள்கை விவகாரத்தை தீவிரப்படுத்தியது மத்திய அரசு. வாட்ஸ்ஆப் தன்னுடைய விதிமுறைகளை மாற்றும்போது ஆதிக்க மனப்பான்மையுடன் நடப்பதாகக் கூறி, மெட்டா, வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு ரூ.213 கோடி அபராதம் விதித்தது.

இந்த பிரச்னை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்று, பிறகு, உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது.

உச்ச நீதிமன்றமோ, வாட்ஸ்ஆப்- நிறுவனத்துக்கு எதிராக மிகக் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. இந்திய மக்களின் 'தனியுரிமையுடன் விளையாட முடியாது' என்று கூறியதோடு, தரவுப் பகிர்வு முறை, மக்களின் தனிப்பட்ட தரவைத் திருடுவதற்கு ஒப்பானது என்றும், படிக்கத் தெரியாதவர்கள், இதற்கு எவ்வாறு ஒப்புதல் அளித்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு விசாரணையில், என்சிஎல்ஏடி-யின் தனியுரிமை உத்தரவுகளைப் பின்பற்றுவதாக வாட்ஸ்ஆப் உறுதியளித்தது. வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது.

வாட்ஸ்ஆப் - சிம் பிரச்னை

2024-ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு விதிகள்படி, மோசடிகளைத் தடுக்க, செல்போன் எண் அங்கீகாரத்தை உறுதி செய்யும் நடைமுறையை தீவிரப்படுத்தியது. இதனால், சிம்கார்டு இருக்கும் செல்போனில் மட்டுமே, அந்த எண்ணின் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முறை உருவானது. இது வாட்ஸ்-ஆப் பயனர்களை வெகுவாகப் பாதித்தது.

லேட்டஸ்டாக வந்த பயனர் சர்ச்சை

தற்போது, வாட்ஸ்ஆப் பயன்பாட்டின்போது, செல்போன் எண்ணுக்குப் பதிலாக பயனர் பெயர் மட்டும் காட்டும் வசதியை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பால், மீண்டும் மோதல் உருவானது.

டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளில் ஏற்கனவே இது நடைமுறையில் இருந்தாலும் மெட்டா அறிவிப்பில், பயனர்கள் இனி தொலைபேசி எண்களைப் பகிர வேண்டியதில்லை என்பதால் இது அதிக தனியுரிமையை வழங்கும் என்ற மத்திய அரசு சிவப்புக்கொடி காட்டியது.

இதனால், ஆன்லைன் மோசடி, ஃபிஷிங், டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்கள் ஆகியவற்றின் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்றும், இது சட்ட விதிகளுக்கு முரணானது என்று மத்திய குற்றம்சாட்டியது.

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா உள்ளிட்ட தொழில்முனைவோர்களால் இந்தப் பிரச்னை அலசப்பட்டது, பெரிய பிராண்டுகள், தலைவர்களின் பெயர்களில் மோசடி செய்யும் அபாயம் உள்ளதாக அவர்கள் கூறிய நிலையில், மத்திய அரசும் - மெட்டா நிறுவனமும் இது குறித்து வாதங்களை முன்வைத்து வருகின்றன.

அதாவது, பல காலமாகவே இந்த மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பெரும்பாலும் பயனர்களின் அடையாளங்களைக் காணும் வகையில் மாற்றங்களையே மத்திய அரசு கோருகிறது. ஆனால், பயனர்களின் அடையாளத்தை மறைப்பது என்பதை நோக்கி பயணிக்கும் வாட்ஸ்ஆப், மத்திய அரசின் வாதங்களை எதிர்த்து பயனர்களின் அடையாளத்தை மறைப்பது - வெளிப்படுத்துவது என இரண்டுமே ஒரே தளத்தில் இருக்க முடியாது என போராடி வருகிறது.

இந்த மோதலில், எந்த தரப்பும் இதுவரை பின்வாங்கவில்லை, தொடங்கியது போலவே விசாரணை முழுவதும் இரு தரப்பும் சளைக்காமல் தங்கள் தரப்பில் கடுமையான வாதங்களை முன்வைத்து வருகின்றன. இவை விரைவில் தீர்வுக்கு வரும் என்று சொல்வதற்கு எந்த அறிகுறிகளும் தென்படவும் இல்லை.

summary

Five-year-long standoff between WhatsApp and the Central Government!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments