FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்! திமுகவுக்காகக் காத்திருக்கிறதா பாஜக?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதம் பற்றி...

Updated On : 17 ஜூலை 2026, 3:15 pm IST
பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் முடிவுகளை எதிர்நோக்கி பாஜக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூன் 9, 2024 அன்று பதவியேற்றது.

மத்திய அமைச்சரவை பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement

(மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின், 2014 - 2019 ஆட்சிக் காலத்தில் மூன்று முறையும், 2019 - 2024-ல் ஒரு முறையும் மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டது)

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களுக்கும், இறுதியில் குஜராத், ஹிமாசல் மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பிரிவினருக்கும் அமைச்சரவை இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் சிலர் கட்சிப் பதவிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், சில மூத்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதம் ஏன்?

கடந்த இரண்டு மாதங்களாகவே பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஜூன் கடைசி அல்லது ஜூலை தொடக்கத்திலேயே புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸையும் இணைத்து, அவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதிப்படுத்த இயலாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற மசோதாக்களை நிறைவேற்றவும், அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தத்தைக் கொண்டு வரவும் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கடந்த ஏப்ரல் மாதம் கூட்டப்பட்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மத்திய அரசு தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காமல் தோல்வியைச் சந்தித்தது.

அதன்பிறகு, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான அரசியல் சூழல் மாறியுள்ளது (மாற்றப்பட்டுள்ளது).

கிட்டத்தட்ட 60 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காமல் பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைச் சந்தித்த நிலையில், தற்போது திரிணமூல் காங்கிரஸின் 20 எம்பிக்கள், உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போது 22 எம்பிக்களை வைத்திருக்கும் திமுகவிடமும், 8 எம்பிக்களை வைத்திருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன்னதாக, மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை சந்தித்து சரத் பவார் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்னதாக, காங்கிரஸுடன் சரத் பவார் தனது கட்சியை இணைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், சரத் பவார் அணியும், அஜித் பவார் அணியும் இணைந்து ஒன்றுபட்ட தேசியவாத காங்கிரஸாக மீண்டும் உருவெடுத்து தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவளிக்குமா? அல்லது சரத் பவார் அணி எம்பிக்கள் பாஜக அல்லது அஜித் பவார் அணியில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக நிலைப்பாடு என்ன?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலமாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாக்கும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வாரத் தொடக்கத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “6 மாதத்துக்குள் மீண்டும் முதல்வர் பதவியில் மு.க. ஸ்டாலின் அமர்வார். திருச்சி சிவா போன்றவர்கள் மத்தியில் அமைச்சர்களாக அமர்வார்கள்” என்று கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, திமுகவை விமர்சித்திருக்கும் அமைச்சர் நிர்மல் குமார், ”திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூவரும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சித்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் தங்கள் கட்சிகளை நடத்த முடியாமல், பாஜகவுடன் தங்கள் கட்சிகளை இணைத்து விடுவர். அத்துடன் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு 2 மத்திய அமைச்சர் பதவிகளும், எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினருக்கு 2 மத்திய அமைச்சர் பதவிகளும் வழங்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு மத்தியில், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பாக திமுக மூத்த தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

திமுக, சரத் பவார் கட்சிகள் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், மத்திய அமைச்சரவை மாற்றமும் தாமதமாகியுள்ளது.

ஆகையால், வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் போகும் மசோதாக்களின் பட்டியலில் தொகுதி மறுவரையறை மசோதா இடம்பெறவில்லை.

ஒருவேளை திமுக, சரத் பவார் கட்சிகள் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில், சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டி, மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றுகூட பாஜக திட்டமிட்டிருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் பாஜகவின் அடுத்த நகர்வுகள் திமுகவின் முடிவில்தான் இருக்கிறது என்றால் மிகையாகாது!

summary

Delay in Union Cabinet reshuffle! Is the BJP waiting for the DMK?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments