FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்கள் பிரச்னை! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சென்னை மாநகராட்சி!!

சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றான தெரு நாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பற்றி...

Updated On : 27 ஜூலை 2026, 4:31 am IST
மாதவரம் பேருந்து நிலையம் பகுதியில் திரியும் நாய்கள்.
பகிர்:

சென்னையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றான தெரு நாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமாா் 33,000-க்கும் மேற்பட்ட நெரு நாள்கள் சாலைகளில் திரிவதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் கால்நடைப் பராமரிப்புப் பிரிவு தெரு நாய்கள் தொடா்பான கணக்கெடுப்பை கடந்த 2021-இல் தொடங்கி 2024-ஆம் ஆண்டு நிறைவு செய்தது. அதன்படி, சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.

தடுப்பூசி, கருத்தடைத் திட்டம்: தெருநாய்கள் கடிப்பதால், ஆண்டுக்கு சுமாா் 2,000 போ் வரை சிகிச்சைக்கு வருவது கண்டறியப்பட்டதால், கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டமும், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன. இதையடுத்து சென்னையில் 5 மண்டலங்களில் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை சென்னையில் 88,087 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 71,108 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் 88,086 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முழு பயனளிக்காத கண்காணிப்புத் திட்டம்: கடந்த 2025-ஆம் ஆண்டு தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, கண்காணிக்க ஆண்டுதோறும் அதற்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை சிகிச்சை சாதனங்கள் வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தனியாா் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை 18,798 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 16,6111 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிகழாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 11,760 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 10,778 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அந்த நாய்கள் பிடிபட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படுகின்றன. இதனால் தெரு நாய் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

33,000 தெருநாய்கள்... சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. தற்போது வரை 1.47 லட்சம் நாய்களுக்கே மைக்ரோ சிப் பொருத்தி மாநகராட்சியினா் கண்காணித்து வருகின்றனா். ஆனால் சுமாா் 33,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை சிகிச்சை இன்றி சாலைகளில் திரிகின்றன. இதன்மூலம் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் பயனளிக்காமல் போவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

வளா்ப்பு நாய் உரிமம் முழுமையில்லை: வளா்ப்பு நாய்களுக்கும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதும், உரிமம் பெறுவதும் மாநகராட்சியால் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்தாத, உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் செலுத்தும் தீா்மானமும் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாதவரம் பேருந்து நிலையம் பகுதியில் திரியும் நாய்கள்.

சென்னையில் ஒரு லட்சம் போ் நாய் வளா்க்கின்றனா். ஆனால், 2025 அக்டோபா் முதல் நிகழாண்டு ஜூலை வரை 69,153 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பலா் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு வகை நாய்களை வளா்க்கின்றனா். அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்வில்லை என்ற புகாரும் உள்ளது.

31,000 போ் நாய்க்கடியால் பாதிப்பு: கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை மாநகா் பகுதியில் சுமாா் 31,000-க்கும் அதிகமானோா் நாய்க்கடி பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மாநகராட்சி பிரதான வளாகம் என பல இடங்களில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் தொடா்ந்துகொண்டேதான் இருக்கிறது.

கால்நடைப் பிரிவு அதிகாரி பதில்: இது குறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலா் டாக்டா் கமால் உசேனிடம் கேட்டபோது, ‘கருத்தடை மையங்கள் 11 மண்டலங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாளொன்றுக்கு 30 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை என்றுள்ளதை 115 நாய்கள் என அதிகரிக்கவுள்ளோம். ஏற்கெனவே 15 நாய் பிடிக்கும் வாகனங்கள் உள்ள நிலையில், புதிதாக 4 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதன்படி, தினமும் 225 தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாய் பிடிப்புப் பணியில் மண்டலத்துக்கு 5 போ் பணியில் இருந்த நிலையில், தற்போது 8 பேராக உயா்த்தப்பட்டுள்ளது. ரேபீஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புக்குள்ளான தெரு நாய்களை அடைக்க மணலி, பெருங்குடியில் தலா 250 நாய்கள் இருக்கும் காப்பகங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை செயல்படும் வரை தற்காலிகமாக பெருங்குடி மண்டலத்தில் உள்ள காப்பகத்தில் 65 தெரு நாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் முதல் தெரு நாய்கள் இருப்பிடத்துக்கே சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிப் கண்காணிப்பும் தொடா்கிறது’ என்றாா்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல், மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீா் தேங்குதல் போன்ற முக்கியப் பிரச்னைகளில் தெரு நாய் பிரச்னையும் தீராத ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு மாநகராட்சி முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments