முகப்பு
சிறப்புச் செய்திகள்

கோடிகளில் இருந்து லட்சத்துக்கு... நடிகர் டூ முதல்வர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் சம்பளம் பற்றி...

முதல்வர் சி. ஜோசப் விஜய் - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகராக இருந்தபோது, கோடிகளில் சம்பளம் பெற்ற சி. ஜோசப் விஜய், தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு வழங்கப்படும் மாத சம்பளம், பிற சலுகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசியலமைப்பு 106-வது சட்டப் பிரிவின் கீழ், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் ஊதியம், படிகள், பிற சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோன்று, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாநில அரசு நிதியில் இருந்து ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகளை அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் வகுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் ரூ. 25,000 ஆக இருந்த நிலையில், 2008-ல் ரூ. 30,000 ஆகவும், 2009-ல் ரூ. 50,000 ஆகவும், 2011-ல் ரூ. 55,000 ஆகவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தபோது, 2017 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை ரூ. 1,05,000 ஆக அதிரடியாக உயர்த்தினார். அதன்பிறகு, எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்தப்பட்ட விதிகளின்படி, முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களின் அடிப்படை ஊதியமும் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது தவிர, மாதாந்திர படித் தொகை, தொலைப்பேசி படி போன்றவை பதவிக்கேற்ற வகையில் மாறுபடும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 1,05,000 ஆக இருக்கும்.

இது தவிர, வாடகைக் கட்டடத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் இயங்கினால், அதற்கான வாடகையையும், எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர் ஒருவருக்கான மாத ஊதியத்தையும் அரசே ஏற்கும். பேருந்து, ரயில், விமானத்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும், சட்டப்பேரவை கூட்டம் அல்லது துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொண்டால் நாளொன்றுக்கு ரூ. 2,500 தனியாக வழங்கப்படும்.

முதல்வர் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தற்போதைய முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அடிக்கடி கூறிய வார்த்தை, “நான் கோடிகளில் வாங்கிய சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன்” என்பதுதான்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின்படி, முதல்வர் ஜோசப் விஜய்க்கு, மாதச் சம்பளமாக ரூ. 2,05,000 மட்டுமே வழங்கப்படுகிறது.

இதில், மாதப்படி ரூ. 10,000, தொகுதிப்படி ரூ. 25,000, தபால்படி ரூ. 2,500, தொலைப்பேசிக்கு ரூ. 7,500, வாகனப்படி ரூ. 25,000 போன்றவையும் அடங்கும்.

பிற சலுகைகள் என்னென்ன?

முதல்வர் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு முழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சர்கள் குடியிருப்புப் பகுதியில் தனி பங்களா, கார்கள் வழங்கப்படும்.

முதல்வர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் அனுமதிக்கப்பட்ட அளிவிலான தனிப்பட்ட உதவியாளர்களின் சம்பளத்தை அரசே ஏற்கும்.

மேலும், முதல்வர் தேவைக்காக தனி விமானம், ஹெலிகாப்டர் போன்றவை பயன்படுத்தினால், அதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

இது தவிர, மத்திய அரசு சார்பில் கமாண்டோக்கள் அடங்கிய ’இசட் பிளஸ்’ பாதுகாப்பு 24 மணிநேரமும் வழங்கப்படும்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி சம்பளம் பெற்ற விஜய் (ஜன நாயகன் படத்துக்கு ரூ. 250 கோடி என்று தகவல்கள் பரவின), தமிழ்நாட்டின் முதல்வராக மாதம் ரூ. 2,05,000 மட்டுமே சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

What is Chief Minister Vijay's salary? What are the perks?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.