FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செயற்கை கல் அறுக்கும் தொழிலில் அடிமைச் சங்கலியை உடைத்த ரத்தினம்!

செயற்கை கல் அறுக்கும் தொழிலில் இருந்த அடிமைச் சங்கிலையை உடைத்த கி. சந்திரசேகர் பற்றி...

2 October 2026, 3:17 pm IST
கி. சந்திரசேகர் - Dinamani
பகிர்:

திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் செயற்கை கல் அறுக்கும் தொழிலில் இருந்த அடிமைச் சங்கிலையை உடைத்த ரத்தினக் கல்லாக விளங்கிய கி. சந்திரசேகர் (73), இன்றும் தளராது சமூகப் பணிகளை திருச்சியை மையமாகக் கொண்டு மேற்கொண்டு வருகிறார். 500 கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களது மறுவாழ்வுக்கு வழிகாட்டிய பெருமையும் இவரைச் சேரும்.

இவர், 1960-களின் பிற்பகுதியிலும் 70-களிலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, திருச்சியின் செயற்கை கல் அறுக்கும் மற்றும் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் அடிமைத் தொழிலாளியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தரகர்கள் இவரது கடின உழைப்பால் சம்பாதித்த கூலியைச் சுருட்டிக்கொண்டிருக்க, அதை அரியாமலேயே நாள்தோறும் கற்களை வெட்டிப் பளபளப்பாக்கும் வேலையைச் செய்து வந்தார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 73 வயதாகும் சந்திரசேகர், சுரண்டலின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அதுபோன்ற இன்னல்களை அனுபவித்த பலருக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

Advertisement

Advertisement

1953-ல் சிவகங்கையில் கிருஷ்ணசாமி மற்றும் அன்னபூரணம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த சந்திரசேகர், தனது தந்தையின் கூடாரத் திரையரங்கத் தொழில் நலிவடைந்தபோது, குடும்பத்துடன் திருச்சிக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 7ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டு, தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அப்போது, திருச்சி முருங்கைப் பேட்டையில் செயற்கை கல் அறுக்கும் தொழில் பிரசித்தி பெற்றிருந்து. 1968ஆம் ஆண்டு முருங்கைப்பேட்டையில் உள்ள செயற்கை கல் அறுக்கும் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு கூலி இடைத்தரகர்கள் மூலமே வழங்கப்பட்டது. இவரது வருமானத்தின் ஒரு பகுதியை இடைத்தரகர்கள் எடுத்துக் கொண்டனர். அக்காலத்தில், கொத்தடிமை முறை என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இல்லதாதால், அடிமைத் தனம் என்று அறியாமலேயே வேலையை தொடர்ந்தார்.

1978-ஆம் ஆண்டு செயற்கை கல் அறுக்கும் மற்றும் மெருகூட்டும் துறையில் பெரிய திருப்புமுனை உருவானது. ஆம், அப்போது பட்டறை உரிமையாளர் ஒருவர் தொழிலாளர்களிடம் ரூ. 15,000 பணம் கேட்டார். அவர்களில் சிலர் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொழிலாளர்களை ஒன்றிணையத் தூண்டியது; இதன் விளைவாக தமிழ்நாடு செயற்கை கல் அறுக்கும் தொழிலாளர் நல மற்றும் பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் வாயிலாக, கூலி மற்றும் பணிச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தொழிலாளர்கள் எழுப்பத் தொடங்கினர்.

மறைந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆட்சிக்காலத்தில், 1981-இல் இத்துறைக்கான குறைந்தபட்ச ஊதியம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் 1985-இல் ஒரு குழு ஊதிய விகிதங்களை நிர்ணயித்தது. இருப்பினும், சில தொழிலாளர்கள் அந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்று கருதினர்.

1980-களின் தொடக்கத்தில், சந்திரசேகர் தனியாகச் செயல்படத் தொடங்கி, சிறிய அளவில் ரத்தினக் கல் பட்டை தீட்டும் தொழிலை நிறுவினார். இது அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் குறிப்பதாக அமைதது. மேலும், இத்துறையில் உள்ள தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் அவரது ஈடுபாடு தொடர்ந்தது. கொத்தடிமைகளைக் கண்டறியும் முயற்சிகளிலும் இறங்கினார். 1984-ஆம் ஆண்டில், இது தொடர்பான ஆவணங்கள் திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. 1985 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 500 கொத்தடிமைகளை மீட்டு மறுவாழ்வுக்கு வழிகாட்டினார்.

இருப்பினும், மறுவாழ்வு நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகள் காரணமாக, விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களில் சிலர் மீண்டும் அதே சுரண்டல் முறைக்கே திரும்பியதால், அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரம் கிடைக்கவில்லை. 2000-ஆம் ஆண்டு முதல், விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யவும், மறுவாழ்வு முயற்சிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் இவரது சங்கம் தீவிரமாகப் பணியாற்றியது. கொத்தடிமை முறை மற்றும் மறுவாழ்வு செயல்முறைகள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய ஒரு தமிழ் வெளியீடும் கொண்டுவரப்பட்டது. இந்த முயற்சிகளில் பலரும் சந்திரசேகருக்கு கரம் கொடுத்தனர்.

இதுதொடர்பாக, மணச்சநல்லூரைச் சேர்ந்த முன்னாள் ரத்தினக் கல் பட்டை தீட்டும் தொழிலாளியான கே. சௌந்தரராஜன் கூறுகையில், மக்கள் தாங்களே ஒரு சுரண்டல் முறையின் அங்கமாக இருக்கும்போது, அதைச் சுரண்டலாக உணர்வதில்லை என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. அதனை ஆழ்ந்து உணர்ந்து அவர்களை அடிமைச்சங்கிலியிலிருந்து விடுவித்தவர்தான் சந்திரசேகர், என்றார் அவர்.

இத் துறையில் கொத்தடிமையாக இருந்து விடுவிக்கப்பட்ட கண்ணுசாமி கூறுகையில், நாங்கள் எந்தக் கொடூரமான அமைப்பில் சிக்கியிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாமலேயே இருந்தது. இத் தொழிலுக்கு வருவதற்கு முன் 10 ஆண்டுகளாக கல் குவாரியிலும் கொத்தடிமையாகவே எங்களது குடும்பம் இருந்தது. சந்திரசேகர் தொடங்கிய சங்கம்தான் எங்களை கொத்தடிமையிலிந்து மீட்டது என்றார்.

இதுதொடர்பாக, சந்திரசேகர் கூறுகையில், தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த செயற்கை ரத்தினக் கல் செதுக்கும் தொழில் காலப்போக்கில் சரிவை சந்தித்தது. குறிப்பாக மலிவான இறக்குமதி செய்யப்பட்ட கற்கள் சந்தைக்கு வந்த பிறகு, பெரிதும் சரிவை சந்தித்தது. சுரண்டல் என்பது இப்போது வேறு வடிவங்களாக மாறியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளும் சுரண்டல்களின் மறுவடிவமாகியுள்ளன. எனவே, சமூகத்தில் எந்த வடிவில் சுரண்டல் வந்தாலும் அதனை ஒழித்திட அமைப்பு சார்ந்து இயங்க முடிவு செய்தேன்.

பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ். குப்பு ராஜ் தலைமையில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளால் 2001-ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்துடன் இணைந்து, திருச்சி மாவட்டத் தலைவராக பணிபுரிந்து வருகிறேன். மக்கள் தங்கள் புகார்களுடன் கண்காணிப்புத் துறையை அணுகுவதற்கு என்னால் இயன்ற உதவிகளை வழங்குகிறேன். சுரண்டல் முறைகளும், அவற்றை ஒழிப்பதற்கான அமைப்புகளும் சமமான நிலையிலேயே நீடிக்கின்றன. செயற்கை கல் அறுக்கும் தொழிலல் முன்னெடுத்த அந்தச் சிறந்த போராட்டம், ஒருங்கிணைந்த தொழிலாளர் சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்குச் சான்றாக உள்ளது என்கிறார் பெருமையாக.

summary

K. Chandrashekar broke the chains of bondage in the artificial stone cutting industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments