முகப்பு
தற்போதைய செய்திகள்

குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

Updated On : 26 பிப்ரவரி 2025, 8:50 am IST
அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கி கார்.
பகிர்:

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே புதன்கிழமை அதிகாலை காரும் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம்,குனியமுத்தூர் காந்திநகர் சுகுணாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான அக்னி வீரனார் கோவிலுக்கு கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு காரில் புறப்பட்டுள்ளனர். காரை ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்த விஷ்ணு (24) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார் கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே அறந்தாங்கில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த கோர விபத்தில் காரில் இருந்த செல்வராஜ் அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண், கார் ஓட்டுநர் விஷ்ணு என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை போலீசார், செல்வராஜ் உள்பட ஐந்து பேரின் சடலங்களையும் மீட்டு

உடல்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பெரோஸ்கோன் அப்துல்லா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.