மண்டை ஓடுகளைத் திருடிய 2 பேர் கைது!
பிகாரில் கல்லறைகளிலிருந்து மனித மண்டை ஓடுகளைத் திருடியவர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மனித மண்டை ஓடுகள் மர்மமான முறையில் காணாமல் போன விவகாரத்தில் அதை திருடியதாக 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் பாகல்பூரின் அஸரப் நகர் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சுமார் 6 உடல்களின் தலைகள் திருடப்பட்டுள்ளன. மேலும், சில நாள்கள் முன்பு அங்கு அடக்கம் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் உடலை மர்ம நபர்கள் தோண்டியெடுத்து தலையை மட்டும் வெட்டிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜன.22 அன்று பதீரு ஜமான் என்பவர் 6 மாதங்களுக்கு முன்னர் அந்த கல்லறையில் அடக்கம்செய்யப்பட்ட அவரது தாயார் பீபி நூர்ஜாவி என்பவரது உடலை காணவில்லை என அம்மாவட்ட காவல் துறையினரிடம் புகாரளித்தார்.
Advertisement
Advertisement
அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் சராயா மற்றும் போரா ஆகிய கிராமங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது முஹம்மது இம்தாது மற்றும் முஹம்மது ஆசாத் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: கும்பமேளா சென்ற பக்தர்களுக்கு உதவி எண்கள்: உத்தரகண்ட் அரசு!
இதனைத் தொடர்ந்து, அந்த விசாரணையில் அப்ஸர் நகர் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டியெடுத்து அதன் தலைகளை வெட்டி மண்டை ஓடுகளை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் உடல்களிலிருந்து திருடிய மண்டை ஓடுகளை கொண்டு செய்வினை செய்து மக்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும், குற்றவாளி இம்தாதிடம் இருந்து ஒரு மனித மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்கரா மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் 14 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அஸரப் நகர் கல்லறை தோட்டத்தை சுமார் 6 கிராமத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், அங்குள்ள மேய்ப்பர்கள் சிலர் அதன் சுற்றுச் சுவரை உடைத்தது தான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.