நாங்கள் அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை: சுசீலா கார்கி
நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம்...
நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம் என நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி தெரிவித்தார்.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன. அப்போது, காவல் துறையினரால் 19 போ் சுட்டுக் கொல்லப்பட்டதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 72 போ் உயிரிழந்தனா்.
இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு சட்டம்- ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வணிக வளாகங்கள், கடைகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதனிடையே, அதிபா் ராமசந்திர பௌடல் 73 வயதான நேபாள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சுசீலா காா்கியை இடைக்கால பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தாா். இதற்கு போராட்டக்காரா்களும் ஆதரவு தெரிவித்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவே சுசீலா கார்கி இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றார்.
இதன் மூலம் பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இமயமலை நாட்டின் முதல் பெண் பிரதமரான சுசீலா கார்கி, இளைஞர் இயக்கத்தினரிடையே மட்டுமல்ல, நேபாளத்தில் நிலவும் கொந்தளிப்பான நேரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் பாரம்பரிய அரசியல் சக்திகளிடையேயும் மிகவும் பிரபலமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக உருவெடுத்தார்.
அதன்பிறகு அங்கு போராட்டம் தணியத் தொடங்கியதை அடுத்து காத்மாண்டு உள்பட நாடு முழுவதும் ராணுவம் விதித்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதாக சனிக்கிழமை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா காா்கி தலைமையில் உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் என முக்கியத் துறைகளுக்கான புதிய அமைச்சரவைக் குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், போராட்டத்தின்போது காயமடைந்து காத்மாண்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சுசீலா காா்கி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது பணிகளைத் தொடங்கிய சுசீலா காா்கி அரசின் செயலா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக போராட்டத்தின் போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தினார்.
போராட்டத்தில் பலியானவர்களை தியாகிகளாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம். மக்களின் ஆதரவோடு புதிய அரசாங்கம் அமைந்தவுடன் அனைத்து அதிகாரத்தையும் பொறுப்பையும் ஒப்படைத்துவிடுவோம். அதை முறையாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுசீலா கார்கி தெரிவித்தார்.
மேலும், ஊழலை ஒழிப்பதற்காக இளைஞர்கள் நடத்திய போராட்டம் பாராட்டுக்குரியது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார சமநிலை என்பது அவர்களது விருப்பமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
போராட்டத்தின் போது இறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மேலும், போராட்டத்தின்போது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரசின் சொத்துகளை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தை நடத்திய இளைஞா்களுக்கு இதில் தொடா்பில்லை. வன்முறையின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது kடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுவரையில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. 191 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் போராட்டக்காரர்கள் 134 பேர், போலீஸ் அதிகாரிகள் 57 பேர் என தெரியவந்துள்ளது.