வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் தட்டம்மை பரவல்: 601-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்புகளுக்கு 601 பேர் பலியாகியுள்ளது குறித்து...
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், கடந்த மார்ச் 15 முதல் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று (ஜூன் 3) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 குழந்தைகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கதேசத்தில் தட்டம்மை பரவலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
சமீபத்திய இறப்புகள் சந்தேகிக்கப்படும் தட்டம்மை இறப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சந்தேகிக்கப்படும் இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், உறுதிசெய்யப்பட்ட தட்டம்மை இறப்புகளின் எண்ணிக்கை 90 ஆகவே உள்ளது. இதே காலகட்டத்தில் 1,210 புதிய சந்தேகிக்கப்படும் தட்டம்மை நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வகப் பரிசோதனைகள் 55 புதிய நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் கூறியுள்ளது.
மேலும், வங்களதேசத்தில் இதுவரை 74,572 தட்டம்மை நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வகப் பரிசோதனைகள் 9,191 பேருக்கு நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 15 முதல் தட்டமை தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 60,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்களில் 55,942 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவு உயிரிழப்புகளை குறைக்காது
பொது சுகாதார நிபுணர் மருத்துவர் எம். முஷ்டுக் ஹுசைன், மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவை மட்டுமே நம்பியிருப்பதால் உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடியாது என எச்சரித்தார்.
தொற்று பாதிப்பு காணப்படும் நோயாளிகளை முன்கூட்டியே தனிமைப்படுத்துதல், சரியான நேரத்தில் ஆக்சிஜன் வழங்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து பராமரிப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், இரண்டு மாத தடுப்பூசி முயற்சிகளுக்குப் பிறகும் நோய்த்தொற்று பாதிப்பு குறையவில்லை என்று கவலை தெரிவித்த அவர், தடுப்பூசியைத் தவறவிட்ட குழந்தைகளை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் வங்கதேசத்தின் மிக மோசமான பொது சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக இந்த தட்டம்மை நோய் பரவல் மாறியுள்ளது. தடுப்பூசி போடுவதில் உள்ள இடைவெளிகளும், தாமதமான தடுப்பூசி முயற்சிகளுமே இந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்று சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் சுகாதாரம் பாதிக்கப்பட்டதற்கும், தட்டம்மை பரவலுக்கும், இடைக்கால ஆலோசகராகப் பதவி வகித்த முஹமது யூனுஸ்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி ஏராளமான ஆர்வலர்கள் கடந்த மே 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.