கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து...
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்து காவலருக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகள், குண்டுவெடிப்பு தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்பட 2,500 கைதிகள் உள்ளனா். தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என்று தனித்தனியான பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவா்கள் அனைவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு காலை, பிற்பகல் மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 29 ஆவது பிளாக் பகுதியில் கைதிகள் ஆனந்த், ஜெயமணி உள்பட 3 கைதிகள் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கைதி வழக்குரைறிஞர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். உடனே மூன்று கைதிகளும் அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை ஒட்டு கேட்பது போல் நெருங்கி நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்த காவலர் மூன்று கைதிகளையும் விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். உடனே அந்த காவலரை ஜெயமணி, ஆனந்த் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக பேசி திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த காவலர் சிறை கண்காணிப்பாளர் தாமரைக்கணியிடம் புகார் செய்துள்ளார். அதன் பேரில் அவர் வந்து விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று கைதிகளும் சேர்ந்து சிறை காவலர் வெள்ளை பாண்டியை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். காயம் அடைந்த சிறைக்காவலர் வெள்ளை பாண்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கோவை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவலர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 3 விசாரணைக் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் மூன்று பேரையும் வேறு சிலைக்கு மாற்றவும் சிறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான கைதியை சரமாரியாக கைதிகள் தாக்கினார்கள். அதற்கு முன்பு ஒரு காவலரை தகரத்தை வைத்து தாக்கிய சம்பவமும் நடைபெற்று உள்ளது.
தற்போது சிறை காவலர்கள் தாக்கப்பட்டது மூன்றாவது சம்பவம் ஆகும். கோவை மத்திய சிறையில் கைதிகள் தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.