பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியிருப்பது குறித்து...
சென்னை: தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக மருத்துவப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், அரசு வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் கடுமையான மருத்துவர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள், புதிய பிரிவுகள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. படுக்கைகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மருத்துவர், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
2015-க்கு பிறகு புதிய அரசு மருத்துவர் பணியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாக்கப்படாத நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், மருத்துவ சேவையை வழங்க தேவையான மனிதவள கட்டமைப்பு விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் தற்போதுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது அதிகப்படியான பணிச்சுமை திணிக்கப்படும் நிலை தொடர்கிறது.
இந்திய பொது சுகாதார தரநிலைகள் படி, தற்போது உள்ள எண்ணிக்கையை விட குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிகமான மருத்துவர், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதனை அரசு மருத்துவர்கள் சங்கங்களும், பொது சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை, வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவமனைகளில், தனித்தனி புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அயல்பணிக்கு அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். புதிய மருத்துவமனைகளுக்கு தேவையான புதிய பணியிடங்களை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும்.
அதேபோல், அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்காக போராடி வருகின்றனர். அரசாணை எண் 354-ஐ மறு ஆய்வு செய்து, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஊதியப்பட்டை-4 அடிப்படையில் 13 ஆண்டுகள் பணிக்காலத்தில் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். இது மருத்துவர்களின் பணித்திறனையும் சேவை மனப்பான்மையையும் மேலும் உயர்த்தும்.
மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு மருத்துவர்களுக்குரிய இடங்கள் பிற தொகுப்புகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் நிரந்தர சட்ட மற்றும் நிர்வாகத் தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ள செவிலியர் பணியிடங்களை குறைந்தபட்சம் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை கைவிட்டு, நிரந்தர பணியிடங்களை உருவாக்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
முதல் நிலை பரிந்துரை மையங்களாக செயல்படும் அரசு வட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேர எக்ஸ்ரே சேவை வழங்க மூன்று ஷிப்டுகளுக்கும் தேவையான எக்ஸ்ரே தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சேவைகள் அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட்டு, அதற்குத் தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ரேடியாலஜி மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற வழக்குகளால் நியமனங்கள் தடைபட்டுள்ளன. இதற்கான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடித்து, சுகாதார ஆய்வாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடு, தேசிய தரச்சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை கவனிக்க தனித்துவமான மேலாண்மைக் குழு அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே அதிக பணிச்சுமையில் உள்ள மருத்துவர்களை நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, முழுமையாக நோயாளிகளுக்கான மருத்துவ சேவையில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவையை உறுதி செய்யவும் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு அவசர முன்னுரிமையுடன் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
The government must take appropriate measures to strengthen the public health infrastructure says Ramadoss...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.