உரம் விலை உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
இந்திய வேளாண்மை உற்பத்திக்கு அவசியமான உரங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் குறித்து...
இந்திய வேளாண்மை உற்பத்திக்கு அவசியமான உரங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய பாஜக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றச் சூழல் காரணமாகவும், ஹார்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வெளிநாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
டய்-அமோனியம் பாஸ்பேட்டிற்கு 60%-க்கும் மேல் இறக்குமதியை சார்ந்திருக்கிறோம். பொட்டாஷுக்கு ஏறக்குறைய முழுமையாக இறக்குமதியையே நம்பி உள்ளோம். உள்நாட்டிலும் மத்திய அரசு உர உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
போர் சூழலை அறிந்து, வேளாண் உற்பத்திக்குத் தேவையான உரங்களை கணக்கிட்டு முன்னரே மத்திய அரசு இறக்குமதி செய்திட உரிய நடவடிக்கையை காலத்தில் எடுத்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இதனால், முக்கிய உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மோனோ-அமோனியம் பாஸ்பேட், மோனோ-பொட்டாசியம் பாஸ்பேட், எஸ்ஓபி மற்றும் தண்ணீரில் கரையும் உரங்கள் போன்ற முக்கியப் பொருட்களின் விலை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்திற்கு இந்தியாவில் உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களும் முக்கியக் காரணமாகும்.
இந்திய வேளாண்மை உற்பத்திக்கு அவசியமான உரங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய பாஜக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், போதிய விளைச்சலின்றி விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு உரங்களை போதிய அளவில் இறக்குமதி செய்யவும், விலை ஏற்றத்தை ரத்து செய்யவும், விலை ஏற்றத்தை ஈடு செய்யும் வகையில் உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிடவும் மத்திய அரசு முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Regarding measures to control the price rise of fertilizers essential for Indian agricultural production...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.