FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனியார் புகார் - பாதிக்கப்பட்டோருக்கு சட்டம் வழங்கும் பாதுகாப்பு! நீதியும் நியாயமும் - 8

புகாரைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்தால் தனியார் புகார் தாக்கல் செய்யலாம் என்பது பற்றி...

நீதியும் நியாயமும் - 8 - AI - Dinamani
பகிர்:

குளித்தலை அருகே வீரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். வயது 85. காய்ந்த மூங்கிலைப் போன்ற தேகம். இஸ்திரி மடங்காத வெள்ளை வேட்டி சட்டை. சட்டைப் பையில் கழுத்துப் பட்டையுடன் இணைக்கப்பட்ட பட்டன் போன். எதையும் கேள்வி கேட்கும் நெஞ்சுரம் கொண்ட பார்வை. பிறருக்குத் தீங்கு நினைக்காத எண்ணம். காந்தியவாதி என்று கர்வத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி. சுப்ரமணியன் அலுவலகத்தில் நிற்கிறார் என்றால், அந்த நேரம் காலை 8.30 மணி. அலுவலகம் திறப்பதற்கு முன்பாகவே வாசலில் நிற்பார். பேருந்தில், 50 கிலோ மீட்டர் பயணம் செய்து மணப்பாறைக்கு வந்து சேர்ந்திருப்பார்.

“அய்யா... வழக்கு நாளைக்குத்தானே இருக்கு?”

“பரவால்லைங்கய்யா... அய்யாவைப் பார்த்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேங்க” என்பார்.

Advertisement

Advertisement

அவருடைய வயதில் பாதியைத் தாண்டாத வயதுடையவன் நான். வழக்கறிஞர் என்ற வகையில், என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மரியாதையாக வெளிப்பட்டது. சொந்த ஊரில் வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்த விரும்பாமல், என்னைத் தேடி வந்திருந்தார். அவருடைய வழக்கு, குளித்தலை நீதிமன்ற வரையறைக்குட்பட்டது. அவரது வீட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் 10 கிலோ மீட்டர்தான். அதே ஊரில் சுப்ரமணியன் தனக்கான வழக்கறிஞரை நியமித்துக்கொண்டிருக்க முடியும். அவரது முன்யோசனை அதைத் தடுத்தது. நீதிக்கான நெடும்பயணத்தில் சுப்ரமணியனுக்கு களைப்பு ஏதும் இருக்கவில்லை. நாளை, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றால், இன்று காலை 8.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் ஆஜராகிவிடுவார். ஒரு வாய்தா, இரண்டு வாய்தா அல்ல. வழக்கு முடியும் வரை அப்படித்தான் அலுவலகத்திற்கு வந்து சென்றார். “தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்” என்றாலும் ஏற்க மறுப்பார்.

“இல்லைங்கய்யா... உங்களுக்கு பல வழக்கு இருக்கு. எனக்கு ஒரு வழக்குதானே, நான்தானே உங்களை வந்து பார்த்து நினைவுபடுத்தணும்” என்பார்.

என்னுடைய 22 ஆண்டுகால வழக்கறிஞர் அனுபவத்தில் சுப்ரமணியனைப் போன்று வேறு ஒரு வழக்காடியைப் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப் போவதில்லை. நேரம் தவறாமையும், முன்னெச்சரிக்கையும் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாலபாடம். மிக நேர்மையான, அறத்திற்கு உட்பட்ட வாழ்வை வாழ்ந்து காட்டியவர். வழக்கறிஞர் கட்டணத்தை நான் ஒருபோதும் அவரிடம் கேட்டதில்லை. தன்னால் இயன்றதை தானே முன்வந்து கொடுத்துவிடுவார்.

நீதிராஜன், நீதிஅரசி என்று தன்னுடைய குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அழகு பார்த்தவர். தன்னுடைய வாழ்விலும் நீதி தவறாமல் நடந்துகொண்டவர். பிறரும் அப்படி வாழ வேண்டும் என்று விரும்பினார். தனது ஓய்வுக்கால வாழ்க்கையில் மனைவியை இழந்திருந்தார். சொத்து சேர்க்காவிட்டாலும் இருக்கின்ற சொத்தை விற்காமல் பாதுகாத்து வைத்திருந்தார். குழந்தைகளுக்குச் சொத்து சேர்ப்பதைவிட கல்வியைக் கொடுத்தால் போதும் என்று வாழ்ந்தவர். அதைத் தன்னளவில் மெய்யாக்கியவர். குழந்தைகள் பெரியவர்களாகி வெளியூரில் பணி செய்து வந்தனர். தனது சொந்த கிராமத்தையும் பூர்விக விவசாய நிலத்தையும் விட்டு வெளியேற சுப்ரமணியன் விரும்பவில்லை. நெடுஞ்சாலையை ஒட்டிய விவசாய நிலம். அதன் ஒருபகுதியில் கூரை வீடு. தனது சகோதரி ஆராயியின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். ஒரு கான்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்பது சுப்ரமணியனின் வாழ்நாள் கனவு. திட்டமிட்டு வைத்திருந்த சேமிப்பைக் கொண்டு ஒரு சிறிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான வேலையைத் தொடங்கினார். தனது கனவு இல்லத்திற்கு ‘காந்தியகம்’ எனப் பெயர் சொல்லி மகிழ்ந்தார். ஒரு வாரத்தில் அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிந்திருந்தன. தனது வீடு கம்பீரமாக எழுந்து வருவதைப் பார்த்த சுப்ரமணியனுக்கு மீண்டும் இளமை திரும்பியதைப்போல இருந்தது. 25 வயது இளைஞனைப்போல சுறுசுறுப்பானார். அதிகாலையிலேயே எழுந்து கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவார்.

ஒரு நாள் கருக்கலில் எழுந்து கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு சுற்றிவந்து பார்த்துக்கொண்டிருந்தார். நான்கைந்து ஆள்கள் தோட்டத்திற்குள் வருகிறார்கள். அவர்களின் குரலை சுப்ரமணியன் அடையாளம் கண்டுகொண்டார். அவரது தோட்டத்திற்குப் பின்னால் நிலம் வைத்திருப்பவர்கள். சுப்ரமணியன் நிலத்தின் வழியாகத்தான் சென்று வந்துகொண்டிருந்தனர். வீடு கட்டுவதையோ தோட்டத்தில் விவசாயம் செய்துகொண்டு சுப்ரமணியன் தங்குவதையோ அவர்கள் விரும்பவில்லை. எதற்காக விடிவதற்கு முன்பே தோட்டத்திற்குள் வருகிறார்கள் என்று சுப்பிரமணியன் விசாரிப்பதற்குள்ளேயே அடித்தளக் கட்டுமானத்தை கடப்பாறை கொண்டு இடிக்கிறார்கள். சுப்ரமணியன் தடுக்க முயற்சிக்கிறார். தள்ளிவிடுகிறார்கள். டிராக்டரை வைத்துக் கட்டுமானத்தை முழுமையாகச் சிதைத்து விடுகிறார்கள். தனது சகோதரனைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் ஆராயி அங்குமிங்கும் ஓடி உதவிக்கு ஆள் தேடினார். யாரும் உதவிக்கு வரவில்லை. கட்டடம் தரைமட்டமானது. பொழுதும் விடிந்தது.

சுப்ரமணியன் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டுகிறார். அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனாலும் அதைத் தடுக்க முடியும் என எதிரிகள் உறுதியாக நம்பினார்கள். இந்த நம்பிக்கை என்பது சுப்ரமணியன் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. இப்படி ஊருக்குச் சிலர் இருக்கிறார்கள். இத்தகைய எண்ணத்திற்குப் பின்னால், பல நூறு ஆண்டு வரலாறு புதைந்து கிடக்கிறது. சொந்த நிலத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களின் துயரம் வரலாறு முழுக்க நிரம்பிக் கிடக்கிறது. தனது நிலம் கொள்ளை போவதை சிலர் எதிர்த்துப் போரிடுகிறார்கள். மாண்டுபோயிருக்கிறார்கள். அவர்களை நடுகல் வைத்து நாம் வழிபடுகிறோம். தனது நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போரிட இயலாதவர்கள் இடம்பெயருகிறார்கள். அகதிகளாகிறார்கள்; நாடோடிகளாக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். நமது நாடு ஜனநாயகத்தன்மைக்கு மாறிவிட்டது. ஜனநாயகம் நூற்றாண்டை நெருங்குகிறது. ஆனால், எளியவர்களின் நிலம் எப்போதும் குறிவைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

சட்டத்தின் ஆட்சி நிலைபெற்றுவிட்டது என்ற நம்பிக்கையில்தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது அதிகாரத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டே வருகிறது என்பதைத்தான் ஒவ்வொரு விடியலும் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ‘வலுத்தவனே வல்லான்’ ஆகிறான். காந்தியத்திற்கும் காந்தியவாதிகளுக்கும் இங்கு போதுமான இடமில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பருந்திடம் குஞ்சைப் பறிகொடுத்த தாய்க்கோழியைப் போல சுப்ரமணியன் மனம் பதறித் துடித்தது. அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனது குற்ற முறையீட்டைக் கொடுக்கிறார்.

“வந்து பாக்குறோம்... நீ புகாரைக் கொடுத்திட்டுப் போ” என்கிறார் காவலர்.

இப்போது வந்துவிடுவார்கள்; அப்போது வந்துவிடுவார்கள் என்று காத்திருந்த சுப்ரமணியன், பொறுமை தவறி மீண்டும் காவல் நிலையத்திற்கு ஓடுகிறார்.

“கோர்ட்டுக்குப் போய் உத்தரவு வாங்கிட்டு வா... ஒடனையேயெல்லாம் கேஸ் போட முடியாது” என்கிறார் காவலர்.

“அய்யா அது என்னோட நிலம்... நானும் அக்காவும் குடியிருக்கோம், பட்டா சிட்டா எல்லாம் எங்க பேருல இருக்கு. என்னோட நிலத்தை அபகரிக்க பாக்குறாங்க. கட்டுற வீட்டை இடிச்சுட்டாங்க. நீங்க நடவடிக்கை எடுங்கய்யா” என்கிறார் சுப்ரமணியன்.

“யோவ் பெருசு... ஒன்னோட அவசரத்துக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது. புகார் குடுத்திட்டியெல்ல. போய்கிட்டே இரு. கூப்புட்டா வா” என்று துரத்தாத குறையாக எச்சரித்து வெளியே போகச் சொல்கிறார் காவலர்.

“அய்யா நான் இன்ஸ்பெக்டர பாக்கணும்” என்கிறார் சுப்ரமணியன்.

“நீ நெனச்சவுடனேயெல்லாம் பாக்க முடியாது. காலையில வா” என்று அனுப்புகிறார் காவலர்.

அது எந்தக் காலை என்பதை உணராமல், எதிரிகள் மீது இன்று நடவடிக்கை எடுப்பார்கள், நாளை நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் காவல் நிலையம் சென்று காத்திருக்கிறார், சுப்ரமணியன். எதுவும் நடக்கவில்லை. மாதங்கள் கடந்தன. கட்டுமானத்தை இடித்த எதிரிகள் ஊரை வலம் வந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமூகத்தின் மீது சுப்ரமணியன் வைத்திருந்த அத்தனை நம்பிக்கைகளும் ஒவ்வொன்றாய் தகர்ந்து விழுந்தன. சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவே இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது முறையீட்டை வழக்காகத் தாக்கல் செய்கிறார் சுப்ரமணியன். உயர்நீதிமன்றம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தலை வழங்குகிறது. சம்பவம் நடைபெற்ற சில மாதங்கள் கழிந்திருந்த நிலையில், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படுகிறது. அதன்பிறகும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எதிரிகள் கைது செய்யப்படவில்லை. கட்டுமானம் இடிக்கப்பட்டு ஓராண்டு நெருங்கியிருந்தது. ஒரு நாள் காவலர்கள் வந்தார்கள். எதிரிகளின் நண்பர்களும் வந்தார்கள். படம் வரைந்தார்கள். அவர்களாகவே பேசிக்கொண்டார்கள்; எழுதிக்கொண்டார்கள்; சென்றுவிட்டார்கள். நடப்பதை சுப்ரமணியனால் ஊகிக்க முடியவில்லை.

சுப்ரமணியனின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த காந்தியத்தின் நெருப்பு நீறுபூக்கத் தொடங்கியது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து சுப்ரமணியனுக்கு அழைப்பாணை வந்திருந்தது. தங்களுடைய புகாரில் பொருண்மைத் தவறு (Mistake of fact) இருப்பதால் புகார் கைவிடப்படுகிறது என்று அழைப்பாணையில் எழுதப்பட்டிருந்தது. அதில் தங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் நேரில் தெரிவித்துக்கொள்ளலாம் என்பதற்குத்தான் அந்த அழைப்பாணை அனுப்பபட்டிருந்தது. அதாவது, சுப்ரமணியன் தனது வீட்டைத் தானே இடித்துக்கொண்டு, எதிரிகள் மீது பொய்யான புகார் கொடுத்ததாகக் கூறி, காவல்துறை வழக்கை முடித்து வைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒரு புகாரைப் பதிவு செய்வதற்கே யுகப்போராட்டம் நடத்த வேண்டிய சூழல் என்பது, ஏதோ இந்த ஒரு சுப்ரமணியனுக்கு மட்டுமல்ல. அதிகாரம் இல்லாத அனைவருக்கும் அதுதான் நிலை.

காவல் துறையினரின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை இங்கு நாம் ஒரு சமகால வழக்கோடு பொருத்திப் பார்க்கலாம். சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும், ஜெம் வீரமணி வழக்கில், ‘மேல்நடவடிக்கை கைவிடப்படுகிறது’ (Further Action dropped) என்று அறிக்கை சமர்ப்பித்து வழக்கை முடித்து வைக்க காவல்துறை முயன்றது. ஜெம் வீரமணி வழக்கை விசாரணை செய்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, காவல் துறையினரின் அறிக்கையை ஏற்க மறுத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த மறுவிசாரணையில்தான் பல உண்மைகள் வெளிவந்து தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக, உலகையே அதிரச் செய்த ‘எப்ஸ்டீன்’ அறிக்கையைப்போல ஜெம் வீரமணி வழக்கும் மாறி உள்ளது. காவல் துறையினரின் அறிக்கையை விசாரணை நீதிபதி ஏற்று வழக்கை முடித்து வைத்திருந்தால், பல சிறுமிகளின் துயரத்திற்கான நீதியும் நியாயமும் ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும். நீதி நின்று கொல்லும் என்பது ஜெம் வீரமணி விஷயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.

பொருண்மைத் தவறு (Mistake of fact) என்றோ, தொடர் நடவடிக்கை கைவிடப்படுகிறது (Further Action dropped) என்றோ நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை சமர்ப்பித்த அநேக வழக்குகளில், காவல்துறையினரின் அறிக்கை நீதிமன்றங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புகார் கைவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பின்னாளில் கைவிடப்பட்ட பல வழக்குகள் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால், புதைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரலாம். இதற்கு ஒரு சாட்சிதான், ஜெம் வீரமணி வழக்கு.

தனது வழக்கு கைவிடப்படுவதாக காவல்துறை அறிக்கை சமர்ப்பித்ததுகூட சுப்ரமணியனுக்கு கவலையில்லை. கட்டுமானத்தை தானே இடித்துவிட்டு எதிரிகள் மீது பொய்யான புகாரைக் கொடுத்துள்ளதாகக்கூறி, வழக்கை முடித்து வைக்கும் காவல் துறையின் நடவடிக்கைதான் சுப்ரமணியனை நிலைகுலைய வைத்தது. தனது உயர்நீதிமன்ற வழக்கறிஞரைத் தொடர்பு கொண்ட சுப்ரமணியனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான், நான். சுப்ரமணியனிடம் இருந்த ஆவணங்களைப் பார்வையிட்டு, புகாரைக் கைவிடும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஒரு ஆட்சேபனை (objection) அறிக்கையும், ஒரு தனிப் புகார் (Private Complaint) ஒன்றையும் தயாரித்துக் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டு தனிப்புகாரின் மீது விசாரணை நடைபெற்றது. அது பின்னர் தனியார் வழக்காக (Private Case) மாற்றப்பட்டது. அந்த வழக்கு ஆண்டுப்பட்டிகை வழக்காக (Calendar Case) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக நீதிக்காகப் போராடிக்கொண்டிருந்த சுப்ரமணியனின் மனக்காயத்திற்கு உடனடியாக மருந்திடும் நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது ஒரு துணிச்சலான நடவடிக்கைதான். வழக்கறிஞராக எனது கடமை என்றாலும் கூட, புகார்தாரருக்கும் துணிச்சல் வேண்டும். காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டாலே “எதிர்த்துப் பேசுகிறாயா” எனக் கட்டம் கட்டும் நாட்டில், காவல் விசாரணை அதிகாரியை குற்றவாளியாகச் சேர்த்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்வது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால், சுப்ரமணியன் அதைப் பெரிதும் விரும்பினார். சுப்ரமணியன் வழக்கில், அத்துமீறி நுழைதல், ஆயுதங்களைக் கொண்டு வீட்டைச் சேதப்படுத்துதல், கொலைமிரட்டல், தகாத வார்த்தைகளில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கட்டுமானத்தை இடித்தவர்களுக்கு எதிராகவும், தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரையும் எதிரிகளாகச் சேர்த்து தனியார் வழக்கைத் (Private Case) தாக்கல் செய்திருந்தோம்.

வீட்டை இடித்த எதிரிகளுடன், கடமையைச் செய்யத் தவறிய காவல் உதவி ஆய்வாளரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு புகாரின் நகல்கள் வழங்கப்பட்டு, விசாரணைக்காக வழக்கு வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தேன். சுப்ரமணியன் முகத்தில் அப்படி ஒரு செழிப்பான புன்னகையை முதன்முறையாகக் கண்டேன்.

“நாம ஜெயிச்சிட்டோமுங்கய்யா” என்று கூறியவாறு, வேகமாக வந்து எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டார் சுப்ரமணியன். வழக்கறிஞருக்கு அதைவிடப் பெரிய மதிப்பு வேறு என்ன இருக்க முடியும்?

அடுத்த வாய்தாவில் குற்றவாளிகளை நோக்கி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட எதிரிகள் அனைவரும் குற்றத்தை மறுத்தனர். அதை நீதிமன்றம் பதிவு செய்துகொண்டது. சாட்சி விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரமணியன் சாட்சியம் அளிக்கத் தயாராக வந்திருந்தார். உதவி ஆய்வாளர் தரப்பில் அவரை விடுவிக்கக் கோரி (Discharge Petition) அவரது வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்தார். வழக்கமாக 15 நாள் அவகாசத்தில் ஒத்தி வைக்கப்படும் வழக்கு அன்றைய தினம், மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி காவல் உதவி ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவிற்கு, உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய சுப்ரமணியன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை மறுத்த விசாரணை நீதிமன்றம் அன்றே காவல் உதவி ஆய்வாளரை விடுவித்து உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர புகார்தாரருக்கு வேறுவழியில்லை. மேல்முறையீடு செய்யும் வலிமை சுப்பிரமணியனுக்கு இல்லை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சுப்ரமணியன் ஒரு வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தார். பின்னாளில் இதர எதிரிகளுக்கு எதிராக வழக்கு நடைபெற்றது. சாட்சிகள் இல்லை என எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர். சுப்ரமணியனின் ‘காந்தியகம்’ கனவு வீடும் அதோடு தகர்ந்துபோனது. எதிரிகளோடு அதிகார மையத்தையும் எதிர்த்துப் போராட விரும்பாத சுப்ரமணியனின் பிள்ளைகள் நகர்ப்புறத்தில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

சற்றேறக்குறைய 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், 1.25 லட்சம் காவலர்கள்தான் பணி செய்கிறார்கள். அவர்களால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது. பெரும்பான்மையான மக்கள் தங்களுக்குள்ளாகவே அறம் சார்ந்த வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். நம்முடைய இலக்கியங்கள் அத்தகைய அறத்தைத்தான் போதித்திருக்கின்றன. இதையெல்லாம் கடந்து பல விரும்பத்தகாத குற்றங்கள் சமூகத்தில் நடைபெறுகிறது. காவலர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் நிற்க வேண்டும். ஆனால், சுப்ரமணியன் போன்றவர்களின் வழக்குகளில் காவலர்கள் எப்போதும் அதிகாரத்தின் பக்கமும், ஜாதியத்தின் பக்கமும், பணபலத்தின் பக்கமும்தான் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் உடனடியாகத் தனது குற்ற முறையீட்டைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைப் (First Information Report) பெற்றுக்கொள்ளும் கட்டமைப்பு நம்மிடம் இல்லை. இத்தகைய நிலை மாற வேண்டும். இப்போதைய கட்டமைப்பில் அந்த மாற்றம் நிகழும் என்பதற்கான சாத்தியங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் தனிப் புகாரைப் (Private Case) பதிவு செய்யும் வழிவகைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முழுமையான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால், மேலும் பாதிப்புக்குள்ளாகாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா வளாகத்தில் கடந்த 8.8.2026 அன்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், 10.08.2026 அன்று அதே ராம்லீலா வளாகத்தில் கூட்டம் நடத்திய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த மேடையைச் சுத்திகரிப்புச் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது. ‘கார்கே ஒரு தலித் என்பதால், வலதுசாரி அமைப்புகள் அந்த மேடையைச் சுத்திகரிப்புச் செய்துள்ளனர். எனவே, அந்த அமைப்பினர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, ‘வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்திப் பேசினார். அதன் பின்னர்தான் வழக்குப் பதிவு செய்தனர். அதே நேரத்தில், ‘சுத்திகரிப்புச் சடங்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்திருந்தனர். ஆனால், ‘சாதிய வண்ணம்’ பூசி சமூகப் பதற்றத்தை உருவாக்குகிறார்’ என்று ராகுல் காந்தி மீது வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் ராகுல் காந்தி மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரைப் பதிவு செய்யாமல் காலம் கடத்துவது, அல்லது இருதரப்பிலும் புகாரைப் பதிவு செய்வது என்பது நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் நமது காவல் துறையினரின் புளுத்துப்போன நடவடிக்கைகளுள் ஒன்று.

அதிகாரத்தின் முன்னால், நமது ஊர் சுப்ரமணியனும் ஒன்றுதான். நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ஒன்றுதான். தேவை என்றால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள். தேவையில்லை என்றால் புகார் கொடுத்தவரையே புகாருக்கு உள்ளாக்குவார்கள்.

பாதிக்கப்பட்டவரின் புகாரை காவல் துறையினர் பதிவு செய்ய மறுத்தால், புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டமான ‘பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா-2023’ , பிரிவு 223-இன்படி, பாதிக்கப்பட்டவர் நேரடியாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனியார் புகாரைத் (Private Case) தாக்கல் செய்யலாம். நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பி, இருதரப்பினரின் கருத்தையும் கேட்டு குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தால், எதிரிக்கு எதிராகக் குற்றச்சாட்டை வணைந்து விசாரணை மேற்கொள்ளும். தனியார் புகார் (Private Case) என்பது, பாதிக்கப்பட்டவருக்கு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்புக் கவசம்.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்

Tamilmani Arumugam, Advocate.

advocatetamilmani@gmail.com

summary

If the police refuse to register a complaint from the aggrieved person, a private case) can be filed; this serves as a protective shield provided by the law to the victim.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments