கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது!
திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
ஹைதராபாத் நிஜாமின் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த தங்க டிஃபன் கேரியர் ஞாயிறு அன்று திடீரென திருடு போனது ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் நிஜாம் நினைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த தங்க டிஃபன் கேரியரில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கப் அண்ட் சாஸர் மற்றும் ஸ்பூனோடு சேர்த்து திருடப்பட்டதாகத் தகவல்.
மியூசிய அதிகாரிகள் திங்களன்று காலையில் வந்து மியூசியத்தைப் பார்வையிட்டபோது நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போனதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். திருட்டு நடந்த இடத்தை சோதனையிட்ட காவல்துறையினர் மியூசியத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே இறங்கி திருட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். உடைக்கப் பட்ட கண்ணாடி ஜன்னல் 4 அடி அகலமானது. ஜன்னலை உடைக்கும் முன் திருட்டில் ஈடுபட்டவர்கள் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து புகைபோக்கி ஜன்னல் வழியாக இறங்கி இந்த திருட்டை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
காவல்துறை விசாரணையில் மேலும் தெரிய வந்த செய்தி, மியூசியத்தில் திருடியவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக வேறொரு டைரக்ஷனில் மியூசியத்தில் நுழைய முற்பட்டிருப்பதால் திருடர்கள் உள்ளே வந்து சென்றதற்கான தகுந்த ஆதாரப் பதிவுகளை சிசிடிவி கேமிராவில் இருந்து பெற இயலவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதிலிருந்து, நிஜாம் அரண்மனையில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் மியூசியத் திருட்டை நிகழ்த்தியது மியூசியத்தின் உள்ளிருக்கும் நபர்களில் ஒருவரே தவிர பிறிதொருவராக இருக்க வாய்ப்பில்லை, திருட்டுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க 10 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
தற்போது திருட்டைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மியூசியத்தில் நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போன பகுதியில் பார்வையாளர்கள் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிஜாமின் தங்க டிஃபன் கேரியர் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் சில...
- திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
- பழங்கால ஆண்டிக் வகை நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப் பட்டு வந்த இந்த டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் 7 ஆம் நிஜாமான மிர் உஸ்மான் அலி கான் காலத்தைச் சேர்ந்தது என்கின்றன மியூசியப் பதிவேடு. மிர் உஸ்மான் 1911 முதல் 1948 வரை ஹைதராபாத் நிஜாமாக இருந்தார். அவரது காலத்தின் பின் ஹைதராபாத் ஒருங்கிணைந்த இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
- திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் நிஜாமின் அரண்மனைகளில் ஒன்றான புரானி ஹவேலி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிஜாமுக்கு இதைப்போல பல மாளிகைகள் ஹைதராபாத் ஓல்ட் சிட்டியில் இருக்கின்றன.
- திருடப்பட்ட நிஜாமின் டிஃபன் பாக்ஸின் இன்றைய சந்தை மதிப்பு 60 லட்சத்துக்கும் மேலிருக்கலாம் என்கிறார் நிஜாமின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்தவரான வரலாற்று ஆசிரியர் சயீஃபுல்லா. வெறும் தங்கத்திற்கான விலை மதிப்பு இது... கூடுதலாக டிஃபன் பாக்ஸில் செய்யப்பட்டுள்ள கலையலங்காரங்களில் பொருத்தப்பட்டுள்ள விலையுயர்ந்த கற்களுக்கும் மதிப்பு சேர்த்தால் இன்றைய தேதிக்கு 1 கோடி ரூபாய்க்கு பெறுமானமுள்ளது அந்த தங்க டிஃபன் பாக்ஸ் என்கிறார் சயீஃபுல்லா..
- ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் இது போன்ற நிஜாம் காலத்து தங்கம் மற்றும் வெள்ளி கலைப்பொருட்களுடன் நிஜாம் காலத்திய கட்டடக் கலை மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையே அதன் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
Related Article
சர்ச்சைக்குரிய ‘மீஷா’ நாவலுக்குத் தடை இல்லை உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
புதிய திட்டங்களோடு வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது ஏர்டெல்!
கேடு விளைவிக்கும் மோனோ சோடியம் குளூட்டாமேட் அற்ற ஃபுட்டிக்ஸ் உணவு பொருட்கள்!
தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்!