பிசிஓஎஸ் தெரியும்! அதென்ன பிஎம்ஓஎஸ்? கருத்தரிப்பதில் பிரச்னை வருமா?
பிசிஓஎஸ் என்ற பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் பிரச்னைகள் பற்றி...
- உன்னிகிருஷ்ணன். எஸ்
இந்த நவீன காலகட்டத்தில் பெண்கள் கருத்தரித்தலுக்குத் தடையாக இருக்கும் பிசிஓஎஸ் - பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன? அதன் பாதிப்புகள், தீர்வுகள் என்னென்ன?
ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை கருத்தரிப்பதற்குத் தடையாக இருப்பதாகவே பலரும் 'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' (பிசிஓஎஸ்) கோளாறுக்கு தீர்வு தேடி மருத்துவர்களை நாடுகின்றனர்.
Advertisement
Advertisement
அதாவது பெண்களின் கருப்பையில் உள்ள சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதையே பிசிஓஎஸ் குறிக்கிறது. ஆனால் உண்மையில் பல பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு மாதவிடாய், கருத்தரிப்பதில் பிரச்னை இருக்கிறது. இதற்கு காரணம் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்கள் ஆகும்.
பிசிஓஎஸ் பெயர் மாற்றம்
இதனால் இந்த பிரச்னைகளையும் குறிக்கும் விதமாக பிசிஓஎஸ் என்ற பெயரை 'பாலிஎண்டோகிரைன் மெட்டபாலிக் ஓவரியன் சிண்ட்ரோம்' (பிஎம்ஓஎஸ்) என்று மருத்துவரீதியாக மாற்றியுள்ளனர். உலகளவில் சுமார் 56 முக்கிய மருத்துவ அமைப்புகளிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்தைத் தொடர்ந்து, பிசிஓஎஸ் என்பது ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு என்பதைச் சரியாக எடுத்துரைக்கும் பொருட்டு அதற்கு பிஎம்ஓஎஸ் எனப் பெயரிட்டுள்ளனர். 'தி லான்செட்' மருத்துவ இதழில் இந்த பெயர் மாற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
'பாலிஎண்டோகிரைன்' என்ற வார்த்தை, இன்சுலின், ஆன்ட்ரோஜன்கள், மூளை சமிக்ஞைகள் உள்பட பல ஹார்மோன் அமைப்புகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. 'மெட்டபாலிக்' என்ற சொல், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இதய நோய் அபாயங்களைக் குறிக்கிறது. இந்த அனைத்து பாதிப்புகளையும் உள்ளடக்கியதுதான் பிஎம்ஓஎஸ்.
பிசிஓஎஸ் என்றாலே பெரும்பாலும் நீர்க்கட்டிகள் பிரச்னை என்று அதற்கேற்பவே பெரும்பாலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் உண்மையான காரணமான ஹார்மோன், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் கண்டறியப்படவில்லை. இந்த புதிய பெயர், பாதிப்பின் உண்மைத் தன்மையை பிரதிபலிக்கிறது.
பிஎம்ஓஎஸ்
பிஎம்ஓஎஸ் ஒரு நாள்பட்ட, பல உறுப்பு மண்டலங்களைச் சார்ந்த நாளமில்லாச் சுரப்பி -வளர்சிதை மாற்றக் கோளாறு. இது கருப்பை இல்லாமல் உடலில் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற விளைவுகளை நோக்குவதாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் இனப்பெருக்க மருத்துவத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ரெஜி மோகன் கூறினார்.
பிஎம்ஓஎஸ் பெயர் மாற்றத்திற்கு இந்தியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியப் பெண்களில் 16% முதல் 18% வரை பிஎம்ஓஎஸ் கோளாறுடன் உள்ளனர். இது உலக சராசரியைவிட மிக அதிகம். முக்கியமாக, தெற்காசியப் பெண்கள் மேற்கத்திய நாடுகளைவிட மிக முன்னதாகவே, வளர்சிதை மாற்றச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பெண்கள் உடல் எடை குறைவாக இருந்தாலும் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். காரணம் கடுமையான இன்சுலின் எதிர்ப்பைக் கொண்டிருக்கலாம். மருத்துவர்கள் இதை 'மெலிந்த பிஎம்ஓஎஸ்' என்று அழைக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் பாதிப்பை சரியாகக் கண்டறிய தெளிவாக புரிந்துகொள்ள 85% இந்திய பெண்கள், பல மருத்துவர்களை அணுகியதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது உடல் எடை, முகப்பரு, அதிக முடி வளர்ச்சி, மனநலம் என பலரும் பல துறை சார்ந்த பல மருத்துவர்களை நாடியுள்ளனர்.
வழக்கம்போல நவீன வாழ்க்கை முறைதான் இதற்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. கேரளத்தில் பெண்களின் 20களில் பிஎம்ஓஎஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தரவுகள் உள்ளன. அதிலும் அவர்கள் கருத்தரித்தலுக்காகவே மருத்துவர்களை நாடும்போது பிஎம்ஓஎஸ் பிரச்னை உள்ளதைத் தெரிந்துகொண்டுள்ளனர்.
"பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஒழுங்கற்ற முறையில் அல்லது சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அதிக திரை நேரம், தூக்கமின்மை ஆகியவை ஹார்மோன் சமநிலையின்மையை மேலும் மோசமாக்குகின்றன. கல்வி, வேலை அழுத்தம், சமூக ஊடகங்களால் ஏற்படும் மன அழுத்தம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது" என்கிறார் டாக்டர் ரெஜி மோகன்.
பாதிப்புகள் என்னென்ன?
பிஎம்ஓஎஸ் என்ற புதிய பெயர் நீர்க்கட்டிகள் போன்ற கருப்பை சார்ந்த பிரச்னைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்ரீதியான கோளாறைக் குறிக்கிறது.
ஆரோக்கியம்
கருப்பை, அட்ரீனல் சுரப்பிகள், கணையம், மூளையின் ஹைப்போதாலமஸ் உள்பட பல நாளமில்லாச் சுரப்பிகள் ஒரே நேரத்தில் பாதிப்புக்கு உள்ளாகும்.
கருத்தரித்தல்
பிஎம்ஓஎஸ் கோளாறால் கருத்தரித்தலில் சவால்கள் இருப்பது முற்றிலும் உண்மையானவை. ஆனால், பல காரணங்களில் அதுவும் ஒன்று. அது மட்டுமே கருத்தரித்தலை முடிவு செய்யாது.
இன்சுலின் சுரப்பு
அதிகப்படியான இன்சுலின் சுரப்பு, ஆண் ஹார்மோன்களை (ஆண்ட்ரோஜன்கள்) அதிகமாக உற்பத்தி செய்ய அண்டகங்களைத் தூண்டி மோசமான எதிர் சுழற்சியை உருவாக்குகிறது.
அழற்சி
நாள்பட்ட, குறைந்த அளவிலான அழற்சி உடல் முழுவதும் பரவி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்திற்கும் விரைவான முதுமைக்கும் வழிவகுக்கிறது.
அண்டவிடுப்பு (ovulation)
ஒழுங்கற்ற அண்ட விடுப்பு அல்லது அண்ட விடுப்பே இல்லாதது என்பது ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக் குழப்பத்தின் பின்விளைவே தவிர, அது மூலக் காரணம் அல்ல.
இன்சுலின் அதிக சுரப்பு, ஆண்ட்ரோஜன் அதிகம் சுரப்பது, அண்டவிடுப்பில் பிரச்னை, கொழுப்பு அதிகம் அல்லது உடல் எடை அதிகரிப்பது, நாள்பட்ட அழற்சி, நீண்ட கால நோய்கள் என இது முழு உடல் கோளாறைக் குறிக்கிறது.
தமிழில்: எம். முத்துமாரி
women health: PCOS is now PMOS; why PCOS name changed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.