முகப்பு
செய்திகள்

வெய்யிலால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி?

கோடை வெய்யிலால் முகத்தில், கைகளில் ஏற்படும் கருமையை நீக்கும் இயற்கையான வழிகள் பற்றி....

Updated On : 5 ஜூன் 2026, 12:59 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

கோடை வெய்யில் காரணமாக சருமம் வழக்கத்திற்கு மாறாக அதிக கருமை நிறத்தை அடைந்து பொலிவை இழக்கும்.

இதனாலே வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் சூரியனின் அதிக ஒளி, காற்று மாசு உள்ளிட்டவற்றால் சருமம் சேதமடையும். இதனால் முகம், கை, கால்கள் கருமையாக மாறும்.

கோடையால் ஏற்படும் கருமையைப் போக்க வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்திப் 'பேக்' போடலாம்.

Advertisement

Advertisement

அழகு நிலையங்களுக்குச் சென்று 'டீ-டேன்' பேஷியல் செய்வதைவிட வீட்டில் உள்ள பருப்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.

இது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சருமம் தெளிவாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கச் செய்கிறது.

மைசூர் பருப்பு

'மைசூர் பருப்பு' எனும் சிவப்புப் பருப்பு நாம் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சமையல் பொருள். இதன் சொரசொரப்பான தன்மை சருமத்தை மென்மையாகத் தேய்த்துச் சுத்தம் செய்து இறந்த செல்களை நீக்கி, பொலிவான சருமத்தைத் தருகிறது.

2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை ஊறவைத்து அரைத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பொலிவு பெறும்.

மைசூர் பருப்பு - கோப்புப்படம்

கடலைப் பருப்பு

பல தலைமுறைகளாகவே பாரம்பரிய அழகுத் தயாரிப்புகளில் கடலைப் பருப்பு ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை மஞ்சளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது, ​​கோடைக் காலத்தில் ஏற்படும் வெயில் பாதிப்பைப் (de-tan) போக்கும். 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு மாவுடன் சிறிதளவு மஞ்சள், தேவைப்பட்டால் ரோஸ் வாட்டர் சேர்த்து அதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும்.

உளுந்தம் பருப்பு / கருப்பு உளுந்து

சருமம் வறண்டு, எரிச்சலுடன் கூடிய கருமை இருந்தால் உளுந்து சிறந்த தீர்வாக இருக்கும். 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவுடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து அந்தக் கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சருமத் துளைகள் ஈரப்பதமாகி தொடர்ந்து செய்யும்போது படிப்படியாக கருமை மறைவதைக் காணலாம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பு சருமத்தை எக்ஸ்ஃபோலியேட், அதாவது சருமத்தில் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது. இதனைத் தக்காளியுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது சருமம் பொலிவுடனும் இயற்கையான தோற்றத்துடனும் காணப்படும்.

2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை ஊறவைத்து அரைத்து எடுத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் புதிய தக்காளிச் சதைப் பகுதியையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் விட்டுவிட்டு மென்மையாகக் கழுவவும். இந்தக் கலவை சருமத்தின் கருமையைக் குறைப்பதுடன் சரும அழுக்குகளை நீக்கி பொலிவாக வைத்திருக்கும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

summary

Skin care: Face darkening caused by the sun; how can be removed?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.