உடல் எடை சரியாக இருந்தால் மட்டும் போதாது! நோய்களுக்கு இதுவும் காரணம்!
நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு உடல் எடை மட்டும் காரணம் அல்ல என மருத்துவர்கள் கூறுவது பற்றி...
-ரிஷப் தாகூர்
சாதாரணமாக நம் உடல் எடை சரியாக இருந்து பிஎம்ஐ (BMI) எனும் உடல் நிறை குறியீட்டெண் சரியாக இருந்தால் போதுமானது என்று நினைக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கவனித்துக்கொள்ள சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பெண் ஒருவர் 60 வயதில் அவருடைய உடல் எடை 81.6 கிலோவாக இருந்தது. பி.எம்.ஐ. 25.4 ஆக இருந்தது. அவர் சரியான உடல் எடையில் இருந்த போதிலும் நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அதற்கு காரணம் அவரது வயிற்றின் சுற்றளவு 106 செமீ ஆக இருந்தது கண்டறியப்பட்டது. வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு காணப்பட்டது. பின்னர் சிகிச்சைகளின் மூலமாக வயிற்றின் சுற்றளவை அவர் 97 செமீ ஆகக் குறைத்த பிறகு உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.
Advertisement
Advertisement
எனவே, உடல் எடை சரியாகயிருந்தாலும் உடலில் ஒரே பகுதியில் கொழுப்பு சேர்வது உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக இந்தியாவில் பலருக்கும் வயிற்று பருமன் பிரச்னை இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 40 % பெண்களிடமும் 12 % ஆண்களிடமும் வயிற்றுப் பருமன் (abdominal obesity) உள்ளது.
சண்டீகரில் பிஜிஐஎம்இஆர் (PGIMER) நடத்திய மற்றொரு ஆய்வில், வயிற்றுச் சுற்றளவில் வெறும் 1.6 செ.மீ. அதிகரிப்புகூட நீரிழிவு நோய் அபாயத்தை மும்மடங்கு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புது தில்லி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் பொது அறுவைச் சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் பங்கஜ் ஷர்மா கூறுகையில்,
"எடை பார்க்கும் கருவியில் உங்கள் எடை மட்டும்தான் தெரியும். ஆனால் உடலில் இருக்கும் கொழுப்பு அளவு தெரியாது. கொழுப்பு இருக்கும் இடமும் பெரும்பாலானோருக்கு வெளியில் தெரிவதில்லை. குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனவே, இந்த வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் முக்கியம். எடையைக் குறைப்பது மட்டுமின்றி உடலில் உள்ளுறுப்புகளில் உள்ள கொழுப்பைக் குறைப்பதையும் இலக்காக கொண்டிருக்க வேண்டும்.
பெண்களுக்கு, நடுத்தர வயதில் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு ஓர் எச்சரிக்கை அறிகுறியாகும். ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, தசை நிறை (muscle mass) குறையும்போது சிறிது உடல் எடை அதிகரித்தாலும் அது பெரும்பாலும் கொழுப்பையே குறிக்கும். இந்திய மாதவிடாய் சங்கத்தின் சமீபத்திய மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, சுமார் 40 சதவீத இந்தியப் பெண்கள் வயிற்றுப் பருமனைக் கொண்டுள்ளனர்.
"மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய, பிந்தைய காலகட்டங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் தசை நிறை படிப்படியாகக் குறைகிறது. இந்த மாற்றம் நீரிழிவு, இதய நோய், கல்லீரல் கொழுப்பு , வளர்சிதை மாற்ற நோய் ஆகியவற்றின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது" என்று டாக்டர் பிமல்பிரீத் மோகன் விளக்குகிறார்.
பொதுவாக ஆண்களுக்கு 90 செ.மீ. பெண்களுக்கு 80 செ.மீ. இடுப்புச் சுற்றளவு வரம்பாக நிர்ணயிக்கப்படுள்ளது. இருப்பினும் இந்த வரம்புகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
நம் இலக்கு எடை குறைவதில் மட்டும் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதிலும் இருக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் இதற்கு முக்கிய தீர்வாக இருக்கும் என்றும் டாக்டர் பங்கஜ் ஷர்மா கூறுகிறார்.
தமிழில் : எம். முத்துமாரி
Having the right body weight isnt enough: This too is a cause of diseases
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.