FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவுமா?

தண்ணீர் குடிப்பது தொடர்பான சில சந்தேகங்களுக்கு மருத்துவரின் பதில்கள்....

12 செப்டம்பர் 2026, 2:25 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- உண்ணிகிருஷ்ணன். எஸ்

பொதுவாக காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இது உடலுக்கு நீர்ச்சத்து வழங்குவதுடன் உடலில் கழிவுகளை வெளியேற்ற உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் உண்மைதானா?

இதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கொச்சி ஆஸ்டர் மெட்சிட்டியின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் வினோத் சேவியர்.

Advertisement

Advertisement

காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமா அல்லது தேவையில்லாததா?

காலையில் எழுந்தவுடன் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், இரவு முழுவதும் உடலில் நீர் இழப்பைச் சரிசெய்ய, மிதமான அளவு தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம். கட்டாயப்படுத்தி அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை.

குளிர்ந்த நீர் / அறை வெப்பநிலையில் உள்ள நீர் / வெதுவெதுப்பான நீர் - இவற்றில் எதை அருந்தினாலும் உடல் அதை ஒரேமாதிரி ஏற்றுக்கொள்கிறதா?

நீரின் வெப்பநிலையைப் பொருத்து உடலானது தண்ணீரை உறிஞ்சுவதில்லை. வயிறு, தான் உட்கொள்ளும் திரவங்களை உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்கிறது. ஆனால், அறை வெப்பநிலையில் உள்ள நீரை அருந்துவது எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்.

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தூக்கத்தைப் பாதிக்குமா ?

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது வாய் வறட்சி, தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தும். தாகத்தால் இரவில் விழிப்பு ஏற்படலாம். இதனால் தூக்கம் பாதிக்கப்படலாம். அதேநேரத்தில் தூங்குவதற்குச் சற்று முன் அதிக அளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் தூக்கம் பாதிக்கப்படலாம். சீரான இடைவெளியில் நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதே சிறந்தது.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுமா?

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது, வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அதிக கலோரி உணவு உட்கொள்வதைக் குறைக்கலாம். ஆனால் தண்ணீர் குடிப்பது, வளர்சிதை மாற்றத்தின் மூலம் கொழுப்பை எரிக்காது. பசியைக் கட்டுப்படுத்த உதவும். தாகமா? பசியா? என்பதை புரிந்துகொள்ள உதவும். எனினும், சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது வயிற்றில் அசௌகரியமான உப்புசத்தை ஏற்படுத்தக் கூடும்.

கார்களில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள சூடான நீரையோ அல்லது இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரையோ குடிப்பது உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துமா?

காரில் நீண்ட நேரம் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெப்பத்தினால் சில வகை பிளாஸ்டிக்கில் இருந்து சில ரசாயனங்கள் தண்ணீருக்குள் செல்லக்கூடும். எனினும் ஆபத்து குறைவுதான்.

சுத்தமான, தரமான செம்புப் பாத்திரத்தில் இரவு முழுவதும் தண்ணீரை வைப்பது பொதுவாகப் பாதுகாப்பானது, ஆனால் நீண்ட காலமாக சேமித்து வைப்பது அல்லது பொருத்தமற்ற பாத்திரத்தில் சேமித்து வைப்பது தண்ணீரில் அதிகப்படியான செம்பு கலக்க வழிவகுக்கும். இது இரைப்பை குடல் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

காய்ச்சல், வயிற்றுப் புண், வைரஸ் தொற்றிலிருந்து மீளும்போது நீர் / எலக்ட்ரோலைட் உட்கொள்ளல் எப்படி இருக்க வேண்டும்?

காய்ச்சல் அல்லது தொற்றுநோயின்போது, சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவ இழப்பு அதிகமாக இருக்கும்.

எனவே, ஓஆர்எஸ், இளநீர், எலக்ட்ரோலைட் பானங்கள் சாப்பிடுவது நீரிழப்பைச் சரிசெய்ய உதவும்.

சிறுநீரகக் கற்களைத் தவிர்ப்பதற்கு, தூங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவது முக்கியமா?

அடர்த்தியான சிறுநீரிலிருந்து கற்கள் உருவாகின்றன. தூங்குவதற்குச் சற்று முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரவு நேர சிறுநீரின் அடர்த்தி குறைந்து கால்சியம், ஆக்சலேட் போன்ற கனிமங்கள் படிவதைத் தடுக்கிறது. ஆனால், ஒரு நாளில் உட்கொள்ளும் மொத்த திரவத்தின் அளவுதான் மிகவும் முக்கியமானது.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Does drinking water before a meal help with weight loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments