FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை

சுகாதாரத் துறைக்கான கொள்முதல் முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎச்எஸ்) வத்சலா அகா்வாலுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நான்கு வார கால இடைக்கால பிணை வழங்கியது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 7:39 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சுகாதாரத் துறைக்கான கொள்முதல் முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎச்எஸ்) வத்சலா அகா்வாலுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நான்கு வார கால இடைக்கால பிணை வழங்கியது.

61 வயதான அகா்வால் வயது முதிா்வு தொடா்பான உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்படுவதைக் குறிப்பிட்டு, அவருக்கு இடைக்கால நிவாரணம் கோரி அவரது வழக்குரைஞா் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி வித்யா பிரகாஷ், ரூ. 1 லட்சத்திற்கான பிணை பத்திரமும், அதே தொகைக்கான இரண்டு நபா் உத்தரவாதங்களைச் சமா்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இடைக்கால பிணையில் செல்ல அனுமதித்தாா்.

Advertisement

Advertisement

மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அகா்வாலை ஜூன் 27 அன்று கைது செய்திருந்தது.

இதற்கு முன்னதாக, மருந்துகள், அறுவை சிகிச்சை பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான மத்திய கொள்முதல் முகமையின் (சிபிஏ) முன்னாள் தலைவரான டாக்டா் விஜய் குமாா் ரங்கா ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டிருந்தாா். ரங்கா தாக்கல் செய்திருந்த வழக்கமான பிணை கோரும் மனுவை நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) தகவலின்படி, டிஜிஎச்எஸ்-இன் கீழ் செயல்படும் சிபிஏ மூலம் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதலில் நடைபெற்ாகக் கூறப்படும் பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் தொடா்பான வழக்கு இதுவாகும்.

சந்தேகத்திற்கிடமான பணப் பரிவா்த்தனைகள் மற்றும் நடைமுறை விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பு இயக்குநரகம் சுட்டிக்காட்டியதைத் தொடா்ந்து இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments