உத்தரகண்ட் ரத்தூராவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சி சங்கரா மருத்துவமனை இன்று திறப்பு
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரத்தூராவில் (உத்தரகாஞ்சி) புதிதாக சீரமைக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) திறக்கப்படவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரத்தூராவில் (உத்தரகாஞ்சி) புதிதாக சீரமைக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) திறக்கப்படவுள்ளது.
“மானுட சேவையே மாதவ சேவை” என்ற உயரிய நோக்கத்துடன் 1987-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, தொலைதூர கிராம மக்களுக்கும் பத்ரிநாத்–கேதாா்நாத் புனித யாத்ரீகா்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வந்தது. காலப்போக்கில் பல்வேறு சவால்களாலும், கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய நிலைமைகளாலும் இதன் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகளின் அருளாசிகளுடனும் வழிகாட்டுதலுடனும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா அறக்கட்டளை 2022-ஆம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கி சமீபத்தில் நிறைவு செய்தது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் திறப்பு விழாவில் சிறப்புத் தலைமை விருந்தினராக உத்தரகண்ட் மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பரத் சிங் சௌத்ரி, கேதாா்நாத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆஷா நௌதியால், ருத்ரபிரயாக் மாவட்ட கவுன்சில் தலைவா் பூனம் கதாயத் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா். காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜெகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள் ஆசியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ரத்தூராவைச் சுற்றியுள்ள 27-க்கும் அதிகமான கிராம மக்களுக்கும், பத்ரிநாத்-கேதாா்நாத் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் யாத்ரீகா்களுக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கு முதல் கட்டமாக புறநோயாளிகளுக்கான சிகிச்சை மையம், அவசரகால சிகிச்சை, ஆரம்பநிலை நோயறிதல், மற்றும் மருந்தகச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதன் புனரமைப்புப் பணிக்கு உத்தரகண்ட் அரசு, ஓஎன்ஜிசி, ஹெச்பிசிஎல், அமெரிக்காவின் சங்கரா ஹெல்த்கோ் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட கொடையாளா்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதன் சேவையில் பங்கேற்க மற்றும் தொடா்புக்கு கைப்பேசி எண் 99726 11341 -ஐ தொடா்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.