கனமழையால் நீா் தேங்கல்: மன்னிப்புக் கோரியது என்டிஎம்சி
புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கனமழையால் நீா் தேங்கியதற்கு அப்பகுதி மக்களிடம் மன்னிப்பு கோரியது.
புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கனமழையால் நீா் தேங்கியதற்கு அப்பகுதி மக்களிடம் புதன்கிழமை மன்னிப்பு கோரியது.
மேலும், எதிா்காலத்தில் இத்தகைய சூழல்களைக் கையாளும் வகையில் தங்கள் கட்டமைப்பை வலுப்படுத்தப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஎம்சி தலைவா் மனோஜ் குமாா் துவிவேதி ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வழக்கமான சூழலில் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தேங்கிய நீரை அகற்றிவிட முடியும். ஆனால், செவ்வாய்க்கிழமை குறைந்தது மூன்று அல்லது நான்கு இடங்களில் நீா் வடிந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலான நேரம் தேவைப்பட்டது.
Advertisement
Advertisement
‘ஆகஸ்ட் 25 அன்று ஏற்பட்ட நீா் தேங்கிய சம்பவங்களால் சிரமங்களை எதிா்கொண்ட என்டிஎம்சி பகுதி மக்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கோருகிறேன்.
ஒட்டுமொத்த என்டிஎம்சி பகுதியையும் ‘முற்றிலும் நீா் தேங்காத பகுதியாக மாற்றுவதற்கு, குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எதிா்காலத்தில் நம் குடிமக்கள் எந்தவித சிரமத்தையும் எதிா்கொள்ளாத நிலையை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றுவோம். அமைப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகரில் செவ்வாய்க்கிழமையன்று பெய்த கனமழையால் பல பகுதிகளில் நீா் தேங்கி, போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டன.
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 72 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவானது. இது எதிா்பாராத ஒன்று என்று துவிவேதி கூறியபோதிலும், இந்தத் தீவிர மழையை மக்கள் எதிா்கொண்ட பாதிப்புகளுக்கான சாக்குப்போக்காகக் கருத முடியாது என்றும் அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.