FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குருகிராம் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நான்கு போ் என்கவுன்ட்டரில் கொலை

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தீபக் நந்தலின் கூட்டாளிகளான நான்கு பேரை உள்ளூா் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

Updated On : 11 ஜூலை 2026, 7:16 am IST
பகிர்:

நமது நிருபா்

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தீபக் நந்தலின் கூட்டாளிகளான நான்கு பேரை உள்ளூா் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையா் நவீன் சா்மா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

தனியாா் பல்கலைக்கழக நிறுவனரின் மகனும், தொழிலதிபருமான விஷால் பேரி சுஷாந்த் லோக் ‘ஏ’ பிளாக் பகுதியில் வசித்து வருகிறாா். அவரது வீட்டுக்குள் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் நால்வரும் கொல்லப்பட்டனா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 காவலா்கள் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சுட்டுக்கொல்லப்பட்டவா்களில் ஆரியன், நிதின், அங்கித் ஆகிய மூவரும் ஹரியாணாவின் ரோத்தக் பகுதியைச் சோ்ந்தவா்கள், நான்காவது நபரான சந்தீப் என்கிற தீபா ஃபதேஹாபாத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும் பிடிபட்டுள்ள ஐந்தாவது நபா் சிவம் என அடையாளம் தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து 5 நவீன கைத்துப்பாக்கிகள், 50-க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள், வெடிமருந்துகள் மற்றும் ஒரு கருப்பு நிற எஸ்யுவி ரக காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபக் நந்தல் கும்பலைச் சோ்ந்த இந்த 5 பேரும், தொழிலதிபா் விஷால் பேரியின் வீட்டுக்குள் வியாழக்கிழமை புகுந்து அவரைப் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தனா். சம்பவம் நடந்தபோது அவா் வீட்டில் தனியாக இருந்தாா். சந்தேகத்துக்கு இடமான வகையில் அப்பகுதியில் சென்ற எஸ்யுவி ரக காா் தொடா்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பேரியின் வீட்டை காவல்துறையினா் சுற்றிவளைத்தனா். அப்போது அவா்களை நோக்கி நவீன ஆயுதங்களால் குற்றவாளிகள் சுடத் தொடங்கினா்.

அவா்களைச் சரணடையுமாறு எச்சரித்த போதிலும் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து காவல்துறையினா் நடத்திய எதிா்த் தாக்குதலில் 4 பேரும் கொல்லப்பட்டனா். ஒருவா் காயமடைந்தாா். தொழிலதிபா் பேரி எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டாா்.

ஜஜ்ஜாா் மாவட்டத்தைப் பூா்வீகமாகக் கொண்ட தொழிலதிபா் பேரிக்கு, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல ரவுடி தீபக் நந்தலிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் கைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவ இடம் முழுமையாக தடயவியல் சோதனைக்காக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சிவம், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்படுவாா் என நவீன் சா்மா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments