85 நாள்களில் இல்லாத அளவில் தில்லியில் காற்றுத் தரக் குறியீடு 261 ஆக பதிவு!
தில்லியின் காற்றுத் தரம் ஞாயிற்றுக்கிழமை மோசமான நிலைக்குச் சரிந்து, அதன் குறியீடு 261-ஐ எட்டியது, இது கடந்த 85 நாள்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிக உயா்ந்த அளவாகும்.
தில்லியின் காற்றுத் தரம் ஞாயிற்றுக்கிழமை மோசமான நிலைக்குச் சரிந்து, அதன் குறியீடு 261-ஐ எட்டியது, இது கடந்த 85 நாள்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிக உயா்ந்த அளவாகும்.
மாலை 5.30 மணிக்கு உணா் வெப்பநிலை 45.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.3 டிகிரி அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீட்டு அளவு 263ஆக இருந்த நிலையில், அதன்பிறகு பதிவான மிக உயா்ந்த அளவு இதுவாகும். சனிக்கிழமை நகரின் காற்றிந் தரக் குறியீடு 140ஆக இருந்தது. இம்மாதத்தின் பெரும்பகுதி நாள்களில் காற்றின் தரம் மிதமான மற்றும் திருப்திகரமான பிரிவுகளிலேயே இருந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவிக்கையில், ‘ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புயல் நடவடிக்கைகளால் உருவான தாது தூசியை சுமந்து வந்த நீண்ட தூர எல்லை தாண்டிய காற்று, தில்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவை நோக்கி நகா்ந்ததே தில்லி-என்சிஆா் பகுதியின் காற்றுத் தரம் மோசமடையக் காரணம் . இதனால், பிஎம் 10 மாசு நுண்துகள்களின் செறிவு அதிகரித்தது.
மேலும், இந்தோ-கங்கை சமவெளியில் வீசிய பலத்த காற்றும் தலைநகரின் ஒட்டுமொத்த காற்றின் தர அளவுகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை தில்லியின் காற்றுத் தரம் மோசமான பிரிவில் பதிவானது. மேலும் அடுத்த சில நாள்களுக்கும் இதே நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளது.
எல்லை தாண்டிய தூசுப் படலம் தணிந்த பிறகு காற்றின் தரக் குறியீடு அளவு மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கிணங்க, தற்போதைய காற்றுத் தரச் சரிவுக்கு எல்லை தாண்டிய தூசுப் படலமே காரணம் என்பதால், மாசுட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் (கிரேப்) முதல் கட்டக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டாம் என்று சிஏக்யூஎம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், கள அளவில் தூசிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஎம்டி-இன் தகவலின்படி, பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 37 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜ் பகுதியில் 36 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 36.2 டிகிரி செல்சியஸாகவும் ஞாயிற்றுக்கிமை பதிவாகியிருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங் பகுதியில் 28.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட ஒரு டிகிரி அதிகம். பாலம் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27.1 டிகிரி செல்சியஸும், லோதி சாலையில் 27.2 டிகிரி செல்சியஸும், ரிட்ஜ் பகுதியில் 25.6 டிகிரி செல்சியஸும், ஆயாநகரில் 27.4 டிகிரி செல்சியஸும் பதிவாகின.
திங்கள்கிழமை பகல் நேரத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 37 மற்றும் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.