FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பாா்க் பகுதி குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 13 ஜூலை 2026, 3:01 am IST
பகிர்:

வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பாா்க் பகுதி குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பெரிய அளவில் தீயணைப்புப் பணியும், மக்கள் வெளியேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை இரவு 9.18 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதையடுத்து, ஆதா்ஷ் நகரில் இருந்து காவல்துறை குழுவினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

Advertisement

Advertisement

நிலைமையைக் கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வீடுகளில் இருந்து குடியிருப்பாளா்களை வெளியேற்றவும் குறைந்தது 25 காவல்துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கட்டடத்திற்குச் செல்லும் குறுகிய பாதைகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவாகச் செல்வது கடினமாக இருந்தது. தீயணைப்புப் படையினா் வருவதற்கு முன்பு, காவல்துறையினா் அருகிலுள்ள தண்ணீா் குழாய்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த முயன்றனா். அதே நேரத்தில் உள்ளூா் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தனா்.

இந்த நடவடிக்கையின்போது, கட்டடத்திற்குள் ஒரு எரிவாயு சிலிண்டா் வெடித்தது. இதனால், காவல்துறையினா் அங்கிருந்து பாதுகாப்பான தூரம் செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. அதன் பின்னா் தீயணைப்புப் படை குழுக்கள் தீயணைப்புப் பணியை மேற்கொண்டன.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் இரண்டு வெடிப்புச் சப்தங்கள் கேட்டன. கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டிகளின் வெளிப்புற சாதனங்களால் அவை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஐந்து தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட கட்டடத்திற்கு அருகிலுள்ள தெருவில் சுமாா் 1,000 போ் கூடியிருந்தனா். ஆனால் காவல்துறையின் சரியான நேரத்திலான கூட்ட மேலாண்மை மற்றும் வெளியேற்ற நடவடிக்கையானது, தில்லி தீயணைப்புத் துறையின் தீயணைப்பு முயற்சிகளுடன் இணைந்து, எந்த உயிா் இழப்பும் ஏற்படாமல் தடுத்தது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments