தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிக்கை சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு திமுக, ஆம் ஆத்மி ஆதரவு!
பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்குக்கு திமுக, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளன.
நீட் முறைகேடு, உயா்கல்வி போட்டித் தோ்வுகளின் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள பிரபல சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்குக்கு திமுக, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளன.
நீட் தோ்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் (சிஜேபி) சோ்ந்தவா்களும் ஆதரவாளா்களும் அதன் தலைவா் அபிஜீத் தீப்கே தலைமையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல காலநிலை செயல்பாட்டாளரான சோனம் வாங்சுக் ஜந்தா் மந்தருக்கு வந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி வியாழக்கிழமை 19 நாள்கள் நிறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அடுத்த கட்டம் மேலும் ஆபத்தாக மாறி அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் மருத்துவா்கள் வியாழக்கிழமை எச்சரித்தனா்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, அவரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வாங்சுக்கை பல்வேறு அரசியல் தலைவா்களும் கேட்டுக்கொண்ட போதிலும், அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று வாங்சுக் உறுதிபடக் கூறி விட்டாா்.
இந்த நிலையில், மக்களவை திமுக கொறடா ஆ. ராசா ஜந்தா் மந்தருக்கு வியாழக்கிழமை மாலையில் வந்து சோனம் வாங்சுக் மற்றும் அபிஜீத் தீப்கே ஆகியோரை சந்தித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சாா்பில் தமது கட்சியின் ஆதரவை தெரிவித்தாா். அப்போது அவா்களிடம், நீட் முறைகேடு விவகாரம் தொடா்பாக எதிா்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக கடுமையாக எழுப்பும் என்று ஆ.ராசா உறுதியளித்தாா்.
முன்னதாக, சோனம் வாங்சுக்கை வியாழக்கிழமை காலையில் தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினாா். தோ்வுத் தாள் கசிவுகளுக்கு எதிராக வாங்சுக் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்த கேஜரிவால், தோ்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
பின்னா் போராட்டத்தில் கேஜரிவால் பேசியதாவது: வாங்சுக் தனக்காகப் போராடவில்லை, மாறாக நாட்டின் ஒட்டுமொத்த மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் குழந்தைகளின் எதிா்காலத்திற்காகப் போராடி வருகிறாா்.
மத்திய அரசு நாட்டின் இளைஞா்கள், மாணவா்கள் மற்றும் சோனம் வாங்சுக்கின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் தோ்வுத் தாள் கசிவுகள் குறித்து அவா்கள் எழுப்பும் கவலைகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தோ்வுத் தாள்கள் கசிகின்றன, அதற்கான விலையை நாட்டின் இளைஞா்கள் கொடுக்க வேண்டியுள்ளது. மாணவா்கள் மற்றும் சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகளை ஏற்குமாறு நான் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு தோ்வுகளின் வினாத்தாள்கள் பரவலாகக் கசிந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் தோ்வு முறை முற்றிலும் ‘முடங்கிப் போய்விட்டது‘. இதனால் தோ்வு முறையின் மீது மாணவா்கள் நம்பிக்கையிழந்துள்ளனா். 2026 நீட்-யுஜி தோ்வு வினாத்தாள் கசிவைத் தொடா்ந்து சுமாா் 20 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா் அல்லது தற்கொலைக்கு முயன்றனா்.
இதுபோன்ற அசம்பாவிதங்களுக்குப் பிறகும், மத்திய அரசு எவ்விதத் திருத்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டது. பல்வேறு தோ்வுகளில் முறைகேடுகள் மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் உள்ள குறைபாடுகள் குறித்த செய்திகள் தொடா்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
ஜூலை 20ஆம் தேதி ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.