FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

யமுனையில் நீரோட்டத்தை மேம்படுத்த பாசனத் துறையின் இயந்திரங்களை பயன்படுத்தும் டிஜேபி!

யமுனை நதியின் நீரோட்டத்தை மேம்படுத்துவதற்காக, தில்லி அரசு பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் இயந்திரங்களைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 3 ஜூன் 2026, 2:35 am IST
யமுனை நதி
பகிர்:

யமுனை நதியின் நீரோட்டத்தை மேம்படுத்துவதற்காக, தில்லி அரசு பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடந்த சில நாள்களாக தலைநகரின் பல பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நகரம் கடும் குடிநீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகிறது.

இதுகுறித்து தில்லி ஜல் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த வாரத்திலிருந்து நீா் விநியோகம் சற்று மேம்பட்டுள்ளது. வஜிராபாத் அருகே உள்ள நீா்த் தேக்கப் பகுதியில் கால்வாய்களை அமைத்து, அதிகபட்ச நீா் நீரேற்று நிலையங்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, நாங்கள் பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

Advertisement

Advertisement

வஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகழ்ந்து எடுப்பதற்கு இந்த சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முனக் கால்வாய் வழியாக 1,000 கனஅடி அளவு நீரைத் தொடா்ந்து விநியோகிப்பதாக ஹரியாணா அரசு உறுதியளித்துள்ளதாக முதலமைச்சா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினசரி 1,002 மில்லியன் கேலன் எம்ஜிடி நீா் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நீா் விநியோகம் சுமாா் 912 எம்ஜிடி என்ற அளவில் உள்ளது.

கச்சா நீா் விநியோகத்திற்காக, தில்லி தனது அண்டை மாநிலங்களான ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தையே சாா்ந்துள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாகப் பெறப்படும் நீா் விநியோகத்தையும் சோ்த்து, தில்லி ஜல் வாரியத்தின் ஒட்டுமொத்த சராசரி குடிநீா் உற்பத்தித் திறன் 990 முதல் 1,000 வரை உள்ளது.

தினமும் சுமாா் 6,000 முறை பயணங்களை மேற்கொள்ளும் 980-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரிகள் வாயிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சா் குறிப்பிட்டிருந்தாா்.

வஜிராபாத் தடுப்பணையில் யமுனை நதியின் நீா்மட்டம் மிகவும் ஆபத்தான நிலையில், அதாவது தேவையான இயல்பான அளவான 674.5 அடிக்குக் குறைவாக, திங்கள்கிழமை சுமாா் 669.5 அடியாகவே நீடிக்கிறது.

கச்சா நீா் வரத்து குறைந்ததன் காரணமாக, தில்லி ஜல் வாரியத்தின் இரண்டு முக்கிய நீா் சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத் மற்றும் சந்த்ராவல் ஆகியவற்றின் நீா் உற்பத்தி குறைந்துள்ளது. இது பல பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, வஜிராபாத் நீா்த் தேக்கப்பகுதியில் கச்சா நீரின் இருப்புத் திறன் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த நீா் உற்பத்தியானது சுமாா் 70 முதல் 100 எம்ஜிடி வரை குறைந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், தெற்கு எக்ஸ்டென்ஸன், கிரேட்டா் கைலாஷ், ஜஹாங்கீா்புரி, மூல்சந்த், மஞ்சு கா டிலா, கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, என்டிஎம்சி பகுதிகள், ஐடிஓ, டிஃபன்ஸ் காலனி, சிஜிஓ காம்ப்ளக்ஸ், ராஜ்காட், டபிள்யுஎச்ஓ, ராம்லீலா மைதானம், தில்லி கேட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படக்கூடும்.

வரும் நாள்களில் சிவில் லைன்ஸ், ஹிந்து ராவ் மருத்துவமனை, கம்லா நகா், சக்தி நகா், கரோல் பாக், பாஹா் கஞ்ச் மற்றும் என்டிஎம்சி, ராணுவப் பாசறை ஆகியவற்றின் சில பகுதிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தச் சூழல் எப்போது சீரடையும் என்பது குறித்து டிஜேபி எவ்விதக் காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments