முகப்பு
புதுதில்லி

அம்மோனியா கசிவு சம்பவம்: தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடா்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு

Updated On : 23 ஜூன் 2026, 4:19 am IST
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி)
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தது மற்றும் பல தொழிலாளா்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா், காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஜூன் 21ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவைச் சுவாசித்ததால், குறைந்தது இரண்டு பெண்கள் உயிரிழந்ததாகவும், பல தொழிலாளா்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் ஊடக செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது, ஊழியா்கள் அருகில் உள்ள ஒரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது கடுமையான மனித உரிமை மீறல் பிரச்னைகளை எழுப்புகிறது என்று ஆணையம் கருதுகிறது. இதன் காரணமாகவே, தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜூன் 22ஆம் தேதி வெளியான ஊடக செய்தியில், சம்பவம் நடந்த உடனேயே சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 தொழிலாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று போ் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments