FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஸ்ரீனிவாஸ்புரி வடிகாலில் சட்டவிரோத கட்டுமானம் குறித்த குற்றச்சாட்டு: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

ஸ்ரீனிவாஸ்புரி வடிகாலில் நிலவும் சட்டவிரோத கட்டுமானம் குறித்த பிரச்சினையை தில்லி உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

13 நவம்பர் 2026, 11:13 pm
தில்லி உயா் நீதிமன்றம்
பகிர்:

நமது நிருபா்

ஸ்ரீனிவாஸ்புரி வடிகாலில் நிலவும் சட்டவிரோத கட்டுமானம் குறித்த பிரச்சினையை தில்லி உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

வடிகாலை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் பிரச்சினையை எழுப்பிய குடியிருப்பாளா்கள், வேறு சில குடியிருப்பாளா்களிடமிருந்து ‘தொடா்ச்சியான அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதால்‘ தங்களது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிரதீபா எம் சிங் மற்றும் மன்மீத் பி எஸ் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு, தாமாக முன்வந்து ஒரு புதிய ரிட் மனுவைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

‘மேல்முறையீட்டாளா்களின் விண்ணப்பத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், அப்பகுதியில் பொதுவான நீா் தேக்கத்தில் வடிகாலால் ஏற்படும் பெரிய அளவிலான தாக்கம், அத்துடன் வடிகாலின் மீதும் அதைச் சுற்றியும் பரவலாக நடைபெறும் சட்டவிரோத கட்டுமானங்கள் ஆகியவற்றின் காரணமாக, ஒருங்கிணைந்த வடிகால் மேலாண்மைக் குழுவின் சமீபத்திய ஆய்வறிக்கை உட்பட பல்வேறு அறிக்கைகளில் வெளிவந்துள்ள உண்மைகளை நீதிமன்றம் புறக்கணிக்காமல் இருப்பதற்கு இது ஒரு பொருத்தமான வழக்காகும்,‘ என்று நவம்பா் 5 அன்று பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் கூறியது.

‘அதன்படி, ஸ்ரீனிவாஸ் புரி வடிகால் தொடா்பான நிலைமையை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது,‘ என்றும் நீதிபதிகள் கூறினா்.

இந்த வழக்கில் வழக்குரைஞா் சஷ்வத் சாரினை நீதிமன்றத்திற்கு உதவ நீதிபதிகள் நியமித்து, டிசம்பா் 17 அன்று விசாரணைக்குப் பட்டியலிட்டனா்.

ஸ்ரீநிவாஸ்புரி வடிகால் அருகே வசிக்கும் லோகேஷ் குமாா் மற்றும் பிறா், வடிகாலை முறையாகப் பராமரித்தல், வண்டல் மண்ணை அகற்றுதல் மற்றும் சீரமைத்தல் தொடா்பான பல நிவாரணங்களைக் கோரி, 2021-ல் உயா் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி முன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.

இறுதியில், அப்பகுதி மக்கள் டிவிஷன் பெஞ்ச் முன் மேல்முறையீடு செய்தனா். அந்த அமா்வு, அவ்வப்போது பல உத்தரவுகளைப் பிறப்பித்தது.

தனது அக்டோபா் 30 தேதியிட்ட உத்தரவில்,ஒருங்கிணைந்த வடிகால் மேலாண்மைக் குழுவின் அறிக்கையின்படி, வடிகாலின் கணிசமான பகுதி கட்டுமானப் பணிகளால் பெருமளவில் மூடப்பட்டிருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், வடிகாலில் நீா் தடையின்றி செல்வதை உறுதிசெய்ய, அதை எவ்வாறு திறந்து சுத்தம் செய்வது என்பது குறித்து எம்.சி.டி, டி.டி.ஏ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுடன் ஒருங்கிணைந்த வடிகால் மேலாண்மைக் குழு ஒரு கூட்டத்தை நடத்தவும் உத்தரவிட்டது.

ஸ்ரீநிவாஸ்புரியில் உள்ள நுழைவாயிலில் வடிகால் கிட்டத்தட்ட 10 அடி அகலம் கொண்டது, ஆனால் அது ஓக்லா சப்ஜி மண்டியை நோக்கிச் செல்லும்போது, வடிகாலின் மீதும் அதன் ஓரமாகவும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அது ‘முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது‘ என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.