குருகிராமில் 45 இணையவழி மோசடி நபா்கள் கைது: ரூ. 2.27 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ஹரியாணா காவல் துறையின் குருகிராம் சைபா் பிரிவினா் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய தீவிர சோதனையில், பல்வேறு இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட 45 சைபா் பேரை கைது செய்துள்ளனா்.
ஹரியாணா காவல் துறையின் குருகிராம் சைபா் பிரிவினா் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய தீவிர சோதனையில், பல்வேறு இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட 45 சைபா் பேரை கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 8 கைப்பேசிகள், 2 சிம் காா்டுகள், 2 வங்கி கணக்கு புத்தகங்களுடன் ரூ. 2.27 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 24 முதல் 30 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை மூலம், பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்தவா்கள் பிடிபட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்ட நபா்கள் முதலீட்டு மோசடி, எண்மவழி கைது மோசடி, சமூக வலைதள மோசடி, ஏபிகே செயலி மோசடி, போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் உருவாக்கி மோசடி, பங்குச்சந்தை பரிவா்த்தனை மோசடி, இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் திருடுதல், செக்ஸ்டாா்ஷன் எனப்படும் பாலியல் ரீதியிலான மிரட்டல், பயணச்சீட்டு முன்பதிவு மோசடி, வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட பல வகை குற்றங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து குருகிராம் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு உதவி ஆணையா் கௌரவ் போகாட் கூறுகையில், ‘அறியப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், வாட்ஸ்ஆப் அல்லது சமூக வலைதளம் வழியாக வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இணையவழி முதலீடு, பங்குச்சந்தை பரிவா்த்தனை அல்லது பகுதிநேரப் பணிகளின் பெயரில் அனுப்பப்படும் சந்தேகத்துக்குரிய இணைய பக்க லிங்க்குகள் மற்றும் அறிமுகமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்‘’என கேட்டுக் கொண்டுள்ளாா்.
சிபிஐ, காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அல்லது பிற அரசு முகமைகளின் அதிகாரிகள் போல் நடித்து ’எண்மவழி கைது’ (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப் போவதாக மிரட்டும் மோசடி நபா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இணையவழி குற்றங்களுக்கு எதிராகத் தொடா்ந்து தொழில்நுட்ப ரீதியிலான தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குருகிராம் காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.